ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தள ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் விரைவில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், ஒடிசாவில் உள்ள பல பகுதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் சுவரொட்டிகள் ஒட்டியிருந்தனர். அதேபோல, மதன்பூர் ராம்பூர்பகுதியில் உள்ள மோகனகிரி என்ற கிராமத்தில் உள்ள கர்லகுந்தா பாலத்தின் அருகிலும் மாவோயிஸ்ட்கள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது.
மாவோயிஸ்டுகள் ஒட்டியிருந்த சுவரொட்டியை அந்த மாநிலத்தின் மொழியான ஒடியாவில் வெளியாகும் தினசரி நாளிதழில் பணியாற்றும் ரோகித் பிஸ்வால் ( வயது 43) என்பவர் நேற்று புகைப்படம் எடுக்கச் சென்றுள்ளார். அந்த சுவரொட்டியை மிகவும் நெருக்கத்தில் சென்று அவர் எடுக்க முயன்றுள்ளார். சுவரொட்டியை சுற்றி புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியில் அவர் சிக்கினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் செல்வதற்குள் வெடிகுண்டு வெடித்து ரோகித்பிஸ்வால் பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழந்த ரோகித் பிஸ்வால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், அந்த கிராமம் முழுவதும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் இரண்டு கம்பெனிகளும், வெடிகுண்டு நிபுணர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த பத்திரிகையாளர் ரோகித் பிஸ்வால் குடும்பத்திற்கு அந்த மாநில முதல்வர் நவீன்பட்நாயக் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், ரூபாய் 13 லட்சம் இழப்பீடும் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தில் அதிகளவில் உள்ள மாவோயிஸ்ட்கள் தாங்கள் ஒட்டிய சுவரொட்டிகளை பாதுகாப்பு படையினர் அகற்றக்கூடாது என்பதற்காக பல சுவரொட்டிகளை சுற்றிலும் வெடிகுண்டுகளை புதைத்து வைத்திருப்பார்கள். இந்த வெடிகுண்டுகள் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தால் தயாரிக்கப்பட்டவைகளாக இருக்கும், இதனால், பாதுகாப்பு படையினரே இவ்வாறான சுவரொட்டிகளை அகற்றுவது என்றால் அதற்கு முன்பு அந்த இடத்தில் வெடிகுண்டு நிபுணர்களை கொண்டு சோதனை செய்த பின்னரே அகற்றுவார்கள்.
இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மாநில முதல்வர் நவீன்பட்நாயக், தனது அரசு இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு அந்த மாநில எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளன. ஒடிசா மட்டுமின்றி வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், வடகிழக்கு இந்தியாவிலும் மாவோயிஸ்ட் மற்றும் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகளவில் காணப்படுகிறது. இதன் காரணமாக, அந்தந்த மாநிலங்களில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்