கேம் சேஞ்சர்
ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கி உச்ச நட்சத்திரம் ராம் சரண் நடித்துள்ள படம் கேம் சேஞ்சர். இந்த பொங்கல் வெளியீடாக நேற்று ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகியது. கியாரா அத்வானி , எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். தமன் இசையமைத்துள்ளார். தில் ராஜூ இப்படத்தை தயாரித்துள்ளார். சுமார் 450 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
கேம் சேஞ்சர் முதல் நாள் வசூல்
கேம் சேஞ்சர் படத்திற்கு கலவையான விமர்சனங்களே வெளியாகியுள்ளன. இந்தியன் 2 படம் எதிர்பார்த்த வெற்றிபெறாத நிலையில் இந்த படத்தில் ஷங்கர் கம்பேக் கொடுப்பார் என்று பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் முதல் நாளில் கேம் சேஞ்சர் படத்தின் வசூல் குறித்த தகவலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன்படி கேம் சேஞ்சர் திரைப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ 186 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொய்யான தகவலை வெளியிட்ட தில் ராஜூ
இன்னொரு பக்கம் தயாரிப்பாளர் தில் ராஜூவின் மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தை தில் ராஜூ தயாரித்திருந்தார். இந்த படம் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்றதாக படம் வெளியானபோது தில் ராஜூ தெரிவித்திருந்தார். ஆனால் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தில் ராஜூ வாரிசு படத்தால் தனக்கு நஷ்டமே ஏற்பட்டதாக தெரிவித்தது சர்ச்சையை கிளப்பியது. விஜயின் அடுத்த படத்தின் கால் ஷீட் வேண்டும் என்பதற்காக வாரிசு படம் வெளியானபோது அப்படத்தின் உண்மையான வசூலை அதிகமாக அவர் சொன்னதாக பலர் அவரை விமர்சித்து வருகிறார்கள். தற்போது கேம் சேஞ்சர் படத்தின் வசூல் தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் படத்திற்கும் அதேபோல் பொய்யான பாக்ஸ் ஆபிஸ் தகவல் வெளியிட்டிருக்கலாம் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.