TN Assembly CM Stalin: தமிழ்நாட்டில் ஏழாவது முறையாக திமுக ஆட்சியமைக்கும் என, முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசினார்.

முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்:

நடப்பாண்டில் தம்ழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது. அதன்படி கூடிய அவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டார். அதன்படி, “மகளிருக்கு கட்டணமில்லாமல் இயக்கப்படும் பேருந்துகளுக்கு ”ஸ்டாலின் பஸ்” என்றே பொதுமக்கள் பெயர் வைத்துவிட்டனர். மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தால் மாணவிகள் உயர் கல்வி படிப்பது 30% அதிகரித்துள்ளது. புதுமைப்பெண் திட்டத்தால் பயன்பெறும் கல்லூரி மாணவர்கள் என்னை அப்பா..அப்பா என அழைக்கிறார்கள்” என கண்கலங்கி பேசினார். மேலும், “கல்லூரி மாணவர்களுக்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் ரூ.1000 வழங்கப்படுகிறது” என தெரிவித்தார். 

விடியல் மக்களுக்கே - ஸ்டாலின்

தொடர்ந்து, “திராவிடம் என்ற சொல்லை பார்த்து சிலர் பயப்படுகின்றனர். அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான வளர்ச்சியே திராவிட மாடல். தமிழ்நாட்டில் ஏழாவது முறையாக திமுக ஆட்சியமைக்கும். அடுத்து அமையும் அட்சியும் திமுக ஆட்சி தான். அதில் எங்களுக்கு இம்மியளவும் சந்தேகமில்லை. நான் செல்லும் இடங்களில் மக்கள் முகங்களில் தெரியும் மகிழ்ச்சியே விடியலின் சாட்சி. விடியல் தரப்போவதாக கூறியது மக்களுக்கே தவிர, எதிர்க்கட்சிகளுக்கு அல்ல. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்கு 5.4% ஆக உள்ளது. மனிதவளத்தை வளர்ப்பதில் மகாராஷ்டிர, குஜராத்தைவிட தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. நாட்டின் வளர்ச்சியடைந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. நாடு முழுவதும் பணவீக்கம்  அதிகரித்த நிலையில் தமிழ்நாட்டில் பணவிக்கம் குறைந்துள்ளது” என தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளுக்கு கேள்வி

அரசியல் உள்நோக்கத்துடன் ஆளுநர் செயல்படுகிறார். பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கும் வகையில் ஆளுநர் செயல்பட்டார்” என்று ஸ்டாலின் குற்றம்சாட்டினார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தபின் சுமார் ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதிகளவு ஜனநாயகவாதியாக இருப்பதாக, பலர் என்னை கூறுகின்றனர். குற்றங்கள் குறைந்து தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது. போராட்டம் நடத்துவது தவறு அல்ல. அனுமதிக்கப்பட்ட இடத்தில் முறையான அனுமதியோடு போராட வேண்டும். அதிமுகவினர் சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்தபோது கோபம் வரவில்லை சிரிப்பு தான் வந்தது. அவையை ஆளுநர் அவமதித்ததை கண்டித்து அதிமுக கருப்பு சட்டை அணிந்திருக்கிறதா? மத்திய அரசு கல்விக் கொள்கையை கண்டித்து அதிமுக கருப்புச் சட்டை அணிந்து இருந்தால் மகிழ்ந்து இருப்பேன். அளுநரை எதிர்த்தும், பாசிசத்தை எதிர்த்தும் அதிமுகவினர் கருப்புச்சட்டை அணிந்து அணிந்து போராடாதது ஏன்?” எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

இதையும் படியுங்கள்: Tata Tiago Tiago EV: புதுசா..தினுசா.. கூடுதல் அம்சங்களுடன் டாடா டியாகோ ஈவி.. என்னென்ன இருக்கு? புதிய விலை?