"சூரரைப் போற்று" திரைப்படம் 2020ம் ஆண்டிற்கான தேசிய விருதுகளை ஐந்து பிரிவுகளில் கைப்பற்றியுள்ளது. அந்த வகையில் அப்படத்தின் சிறந்த பின்னணி இசைக்காக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷிற்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
வேஷ்டி புடவையில் கலக்கிய படக்குழுவினர்:
68 வது தேசிய விருது வழங்கும் விழா இன்று மாலை முதல் டெல்லியில் நடைபெற்று வருகிறது. திரைப்பட துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றும் தேசிய விருது பெரும் அனைவருக்கும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் விருதினை வழங்கி கௌரவித்து வருகிறார். இந்த விழாவில் "சூரரைப் போற்று" படக்குழுவினர் நமது நாட்டின் பாரம்பரிய உடையான பட்டு வேஷ்டி புடவையில் கலந்து கொண்டு விருதினை பெற்றனர்.
தேசிய விருது குறித்து ஜி.வி. பிரகாஷ் நெகிழ்ச்சி :
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் டெல்லியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட போது அவரிடம் சூரரைப் போற்று படத்திற்காக விருது பெற்றதை பற்றிய அவரின் கேட்டதற்கு அவர் பதில் அளிக்கையில் " இது எனது முதல் தேசிய விருது என்பதால் நான் மிகவும் சந்தோஷமாக உள்ளேன். இந்த திரைப்படத்திற்காக எங்கள் படக்குழுவினர் பலருக்கும் விருதுகள் கிடைத்துள்ளதை எண்ணியும் எங்கள் அனைவரின் கடுமையான உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரத்தை எண்ணியும் மகிழ்ச்சியடைகிறேன். இப்படத்தின் திரைக்கதை மிகவும் கடினமானதாக இருந்ததால் ஸ்கோர் செய்வது கஷ்டம். இது ஒரு மோட்டிவேஷனல் திரைப்படமாக இருப்பினும் அதில் ஏராளமான உணர்ச்சிபூர்வமான தருணங்கள் இடம் பெற்று இருந்தது. மதுரை பகுதியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால் இந்த படத்தின் பின்னணி இசைக்காக ஃபோக் இசைக்கருவிகளை பயன்படுத்தி சர்வதேச அளவிலான இசையை கொண்டுவந்தோம். இப்படத்திற்கு தேசிய விருது வழங்கியதற்கு நன்றி" என தெரிவித்தார் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்.
அனைவரின் பாராட்டை பெற்ற சூரரைப்போற்று:
2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் சூர்யா - ஜோதிகா இணைந்து தயாரித்த திரைப்படம் "சூரரைப் போற்று". இயக்குனர் சுதா கொங்கரா இயக்கிய இப்படத்தில் நடிகர் சூர்யா, அபர்ணா முரளி, ஊர்வசி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 2020ம் ஆண்டு அமேசான் பிரைம் ஓடிடியில் இப்படம் வெளியிடப்பட்டது. ராணுவ கேப்டன் ஜி. ஆர். கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் திரை துறையினர், திரை விமர்சகர்கள், ரசிகர்கள் என அனைவரின் பாராட்டையும் பெற்றது. இப்படத்திற்கு சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை என ஐந்து பிரிவுகளில் தேசிய விருது ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து இப்படக்குழுவினருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்த வண்ணமாக உள்ளன.
68-வது தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு குடியரசு தலைவரிடம் இருந்து விருதுகளை "சூரரைப் போற்று" படக்குழுவினர் பெரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அந்த புகைப்படங்கள் லைக்ஸ்களையும், கமெண்ட்களையும், வாழ்த்துக்களையும் குவிந்து வருகின்றன.