தனுஷ்
நடிகர் , இயக்குநர் என காலில் சக்கரம் கட்டி ஓடிக் கொண்டிருப்பவர் தனுஷ். ஒரு பக்கம் தெலுங்கில் குபேரா , இன்னொரு பக்கம் இந்தியில் தேரே இஷ்க் மே என அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். இன்னொரு பக்கம் தமிழில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் , இட்லி கடை என இரு படங்களை இயக்கி முடித்துள்ளார். இதில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இட்லி கடை படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்
ராயன் படத்தைத் தொடர்ந்து தனுஷ் இயக்கியுள்ள படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இப்படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா வாரியர் உள்ளிட்ட இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். பிரியங்கா மோகன் மற்றும் தனுஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகியுள்ளது. Gen Z கிட்ஸ்களின் காதலை மையமாக வைத்து ரொமாண்டிக் காமெடியாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏற்கனவே பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் வரதொடங்கிவிட்டன. மேலும் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது இதில் கலந்துகொண்ட படத்தின் இசையமைப்பாளர் தான் இந்த படத்திற்கு சம்பளமே வாங்கவில்லை என்று தெரிவித்துள்ளார்
ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை
தனுஷ் நடித்த பொல்லாதவன் , ஆடுகளம், மயக்கன் என்ன ஆகிய படங்களுக்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இருவருக்கும் இடையில் நல்ல நட்பு இருந்து வந்த நிலையில் இடைப்பட்ட காலத்தில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்பட்டது. வெற்றிமாறனின் அசுரன் படத்தில் இந்த கூட்டணி மீண்டும் இணைந்தது. தற்போது நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் ஜி.வி இசையமைத்துள்ள அனைத்து பாடல்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளன. குறிப்பாக கோல்டன் ஸ்பேரோ பாடல் வைரல் ஹிட் ஆகியுள்ளது.
டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய ஜி.வி பிரகாஷ் இந்த படத்தில் தான் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை என்று தெரிவித்தார். ஜெயிலர் படம் வெற்றிபெற்றதும் படக்குழுவினருக்கு செக் கொடுத்தது போல படம் வெற்றிபெற்றால் தன்னை கவனிக்கும் படி அவர் விளையாட்டாக கூறினார்.