தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பன்முக கலைஞராக பிரபலமானவர் ஜி.வி. பிரகாஷ். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரி ஏ.ஆர்.ரெய்ஹானாவின் மகனான ஜி.வி. பிரகாஷ் சிறு வயது முதலே ஏராளமான பாடல்கள் மூலம் தன்னுடைய குரலை தமிழ் நெஞ்சங்களில் பதித்தவர்.
சிக்கு புக்கு புக்கு ரயிலே, குச்சி குச்சி ராக்கம்மா உள்ளிட்ட பாடல்களில் மழலையாய் ஒலித்த அந்த குரல் தான் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இளம் வயதிலேயே தேசிய விருதை குவித்த ஒரு சாதனையாளராக வலம் வருகிறார். இந்த இசை அருவியின் 37வது பிறந்தநாள் இன்று.

ஏ.ஆர். ரஹ்மான், பரத்வாஜ் உள்ளிட்ட ஏராளமானோரிடம் கிடாரிஸ்டாக இருந்து வந்தாலும் 2006ம் ஆண்டு வசந்த பாலன் இயக்கத்தில் வெளியான 'வெயில்' படம் மூலம் வெயிலோடு உறவாடி வெயிலோடு விளையாடி... எனக் குழந்தை பருவத்து மலரும் நினைவுகளை புதுப்பித்து இசையமைப்பாளராக அறிமுகமானார். அவரின் இசையில் ஒலித்த 'உருகுதே மருகுதே...' பாடல் இன்று வரை காதலர்களின் கீதாமாகே இருந்து வருகிறது.
முதல் படத்திலேயே டாப் கியர் போட்ட ஜி.வி. பிரகாஷ் அதை தொடர்ந்து கிரீடம், பொல்லாதவன், அங்காடி தெரு, ஆனந்த தாண்டவம், மதராசபட்டினம், ஆடுகளம், ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, தெய்வ திருமகள் என அடுத்தடுத்து ஹிட் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளர்களின் பட்டியலில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார். 2020ம் ஆண்டு வெளியான 'சூரரைப் போற்று' படத்திற்காக தேசிய விருதை பெற்றார். தற்போது ஜி.வி. பிரகாஷ் ராஜ் இசையமைத்துள்ள தங்களான், வணங்கான்,சூர்யா 43, அமரன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், வீர தீரா சூரன் உள்ளிட்ட ஏராளமான படங்கள் வெளியாக காத்திருக்கின்றன.
ஒரு இசையமைப்பாளராக ஜொலித்த ஜி.வி. பிரகாஷ் ஒரு நடிகனாகவும் களத்தில் இறங்கினார். 2013ம் ஆண்டு வெளியான 'பென்சில்' திரைப்படத்தின் மூலம் நடிகனாக அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்னேறி டார்லிங் படம் வெளியானது. அதை தொடர்ந்து திரிஷா இல்லனா நயன்தாரா, நாச்சியார், சர்வம் தாளமயம், குப்பத்து ராஜா, சிவப்பு மஞ்சள் பச்சை, செல்ஃபி, அடியே உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
ஜி.வி. பிரகாஷ் பள்ளி தோழியான பின்னணி பாடகி சைந்தவியை 2013ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். மிகவும் சந்தோஷமாக அமைந்த அவர்களின் திருமண பந்தத்தின் அடையாளமாக பெண் குழந்தை ஒன்று பிறந்தது. ஆனால் அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சமீபத்தில் தான் பிரிந்தனர். ஜி.வி. பிரகாஷ் தங்கை பவானிஸ்ரீயும் வெற்றிமாறனின் விடுதலை படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் சில சறுக்கல்களை சந்தித்தாலும் திரை வாழ்க்கையை பொறுத்தவரையில் அவரின் கிராப் என்றுமே உயர்ந்து கொண்டு தான் இருக்கிறது. மேலும் பல வெற்றிகளையும் விருதுகளையும் குவிக்க வாழ்த்துக்கள்!