மருத்துவப் படிப்புகளுக்கு நடத்தப்படும் நீட் தேர்வில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ள மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நீட் தேர்வர்களை மத்திய அரசு ஒருபோதும் கைவிடாது என்றும் உறுதி அளித்துள்ளார்.   

 

இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் டெல்லியில் கூறியதாவது:


’’நீட் தேர்வில் மாணவர்கள் சந்தித்த சவால்கள், பிரச்சினைகள் குறித்து பரிசீலனை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்வில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குக் கண்டிப்பாக நீதி கிடைக்கும்.


நீட் தேர்வைப் பொறுத்தவரை 24 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதியுள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பான அவழக்கு விசாரணை நடைபெறுகிறது. இந்த விவகாரம் சுமார் 1,500 மாணவர்கள் தொடர்பானது மட்டுமே. அரசு இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் பதில் அளிக்கத் தயாராக இருக்கிறது.




இந்த விவகாரம் குறித்து விசாரிக்க கல்வியாளர்கள் அடங்கிய உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் அரசு சமர்ப்பிக்கும்.


நாடு முழுவதும் நீட், க்யூட், ஜேஇஇ ஆகிய 3 முக்கியத் தேர்வுகளை என்டிஏ வெற்றிகரமாக நடத்தி வருகிறது. கண்டிப்பாக நீட் விவகாரத்தில் மத்திய அரசு துணை நிற்கும். கைவிட மாட்டோம். உரியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்போம்’’.


இவ்வாறு மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். 


கருணை மதிப்பெண் பெற்ற தேர்வர்களுக்கு மட்டும் நீட் மறு தேர்வு


முன்னதாக, தேர்வறையில் நேரக் குறைவால் பாதிக்கப்பட்டதால் கருணை மதிப்பெண்கள் பெற்ற 1,563 மாணவர்களுக்கு மட்டும் நீட் மறு தேர்வு நடத்தப்படும் என்று தேசியத் தேர்வுகள் முகமை உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 13) தெரிவித்தது. எனினும் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் கலந்தாய்வுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.


நீட் தேர்வு வினாத்தாள் லீக், ஆள் மாறாட்டம், தேர்வு முடிவுகளில் கருணை மதிப்பெண்கள் வழங்கிய விதம், ஒரே தேர்வறையைச் சேர்ந்த 8 மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றது உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகளைக் குறிப்பிட்டு, இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.