ஐபிஎல் தொடரில் சென்னை - ஹைதரபாத் அணிகள் நாளை மோதவுள்ள நிலையில் கஸ்டடி படக்குழு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். 


ஐபிஎல் போட்டி


ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 29வது லீக் ஆட்டத்தில் சென்னை, ஹைதராபாத் அணிகள் மோதுகின்றது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெற்று எப்படியாவது புள்ளிப் பட்டியலில் முன்னேற சென்னை அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான டிக்கெட்டுகளும் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்ட நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் இந்த போட்டியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 


வீடியோ வெளியிட்ட கஸ்டடி படக்குழு 


தமிழ் சினிமாவில் ஜாலியாக ரசிகர்களை கவரக்கூடிய வகையில் படம் கொடுக்கும் இயக்குநர்களில் ஒருவர் வெங்கட் பிரபு. சென்னை 600028 படத்தின் மூலம் இயக்குநரான அவர், தொடர்ந்து  சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாஸ், சென்னை 28 பாகம் 2, மன்மத லீலை என பல படங்களை இயக்கியுள்ளார். அடுத்ததாக வெங்கட் பிரபு கஸ்டடி படத்தை எடுத்துள்ளார். 


இந்த படத்தில் தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ள நாக சைதன்யா ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக க்ரித்தி ஷெட்டி, வில்லனாக அரவிந்த் சாமி நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் சரத்குமார், பிரியாமணி,  மற்றும் ரவி பிரகாஷ் என பலரும் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா  இணைந்து இசையமைத்துள்ளனர்.  


ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் மே 12 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் டீசர் அண்மையில் இருமொழிகளிலும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. காவல்துறையை சேர்ந்த நாயகனின் வாழ்க்கையை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், கஸ்டடி படக்குழு ப்ரோமோஷனில் தீவிரமாக களமிறங்கியுள்ளது. 



அந்த வகையில் தற்போது  நடந்து வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு  ஆதரவு தெரிவித்து இயக்குநர் வெங்கட் பிரபுவும், ஹைதராபாத் அணிக்கு ஆதரவும் தெரிவித்து நாகசைதன்யாவும் ஜாலியாக சண்டைப் போடுவது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளனர். இறுதியில் வெங்கட்பிரபுவின் ஆஸ்தான பார்ட்னரும், அவரது சகோதரருமான பிரேம்ஜி அமரன் இருவருக்கும் சமரசம் செய்வது  போன்ற காட்சிகள்  அந்த வீடியோவில் இடம்  பெற்றுள்ளது. மேலும் அந்த வீடியோவின் இறுதியில் கஸ்டடி திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.


மேலும் படிக்க: Dhanush Movie: இப்போதைக்கு தனுஷ் படம் இல்லை; கைவிரித்த மாரி செல்வராஜ்; அதிர்ச்சியில் ரசிகர்கள்!