மே 1ம் தேதி உழைப்பாளர் தினம். தமிழ் சினிமாவை பொறுத்தவரை அன்று அஜித்குமார் பிறந்தநாள். ஒவ்வொரு வருடமும் மே 1ம் தேதியை அஜித் ரசிகர்கள் கோலகலமாக கொண்டாடுவார்கள். அந்த வகையில் 2011ம் ஆண்டு மே 1ம் தேதிக்காக அஜித் ரசிகர்களும், அஜித்குமார் நற்பணி இயக்கத்தினரும் காத்துக்கிடந்தனர். சரியாக ஏப்ரல் கடைசியில் அஜித்குமாரிடம் இருந்து ஒரு அறிக்கை வந்தது. அது ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
இனி நற்பனி இயக்கம் வேண்டாமென்ற செய்தியை தாங்கி வந்தது அந்த அறிக்கை. அந்த அறிக்கையில், ''நான் என்றுமே ரசிகர்களை எனது சுயநலத்திற்காக பயன்படுத்தியதில்லை. எனது தளிப்பட்ட விருப்பு, வெறுப்புக்காக அவர்களை கேடயமாக பயன்படுத்தி கொண்டதும் இல்லை, பயன்படுத்தவும் மாட்டேன். நான் நடித்த படங்கள் நன்றாக இருந்தால் அதற்கு அதரவு தரவும் - சரியாக இல்லாவிட்டால் விமர்சிக்கவும் ரசிகர்களுக்கு உரிமை உண்டு. எனது திரைப்படத்தை ரசிக்கும் ரசிகர்கள் எல்லோருமே என் இயக்க உறுப்பினர்கள் இல்லை என்பதை நான் அறிவேன்) என் ரசிகர்களிடையே இக்காரணத்தை கொண்டு நான் வித்தியாசம் பார்ப்பதில்லை - பார்க்கவும் மாட்டேன். கோஷ்டி பூசல், ஒற்றுமையின்மை, தலைமையின் கட்டுப்பாட்டிற்கு இணங்காமல் தன்னிச்சையாக செயல்படுவது, தாங்களது தனிப்பட்ட அரசியல் கருத்துக்காக நற்பணி இயக்கத்தை பயன்படுத்துவது என்ற பல்வேறு காரணங்கள் என்னுடைய எண்ண ஓட்டத்திற்கு உகந்ததாக இல்லை. சமுதாய நல பணிகளில் ஈடுபடுவது கூட யாருக்கும் இடையூறு இல்லாமல் குறிப்பாக தங்களது குடும்பத்திற்கு சுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பதையே நான் வலியுறுத்தி வருகிறேன். நலதிட்டங்கள் செய்வதற்கு இயக்கம் என்ற அமைப்பு வேண்டாம், நல் உள்ளமும் எண்ணமும் போதும் என்பதே என் கருத்து'' என்று அறிவித்தார்.
உள்ளதுபடியே இது அஜித் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. ரசிகர்களுக்கு மட்டுமல்ல, சினிமாத்துறைக்கே அதிர்ச்சி. ரசிகர் மன்றம் வெறும் சேவைக்கு மட்டுமானது அல்ல. அதில் நடிகர்களின் மார்கெட்டை தக்கவைத்துக்கொள்ளும் ஒரு சூட்சமும் உண்டு. ரசிகர்கள் மன்றம் மூலம் என்றுமே பரபரப்பாக பெயரை மார்கெட்டில் வைத்திருக்க வேண்டும் எனவும் நினைப்பதுண்டு. இப்படியான ஒரு ஆயுதத்தை ஏன் அஜித் துறக்கிறார் என கிசுகிசுத்தது கோலிவுட். அதுவும் தொடர் தோல்விகளை சந்தித்து மீண்டும் அஜித் மார்கெட் பிடித்த நேரம் அது. அவரின் 50தாவது படமான மங்காத்தா வெளியாக தயாராக இருந்தது. இப்படியான நேரத்தில் இதுவரை எந்த நடிகர்களுமே செய்யாத ஒரு வேலையை செய்திருந்தார் அஜித். ரசிகர் இயக்கத்தை கலைத்தது அஜித்துக்கு பெரும் பின்னடைவைத் தரும் என்றும், 50தாவது படமான மங்காத்தா எதிர்வினைகளையும் சந்திக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால் அனைத்தையும் பொய் ஆக்கினார்கள் அஜித் ரசிகர்கள். அஜித்தின் அறிவிப்பின்படியே அவரது மன்றங்கள் கலைக்கப்பட்டன. இனி அஜித்தின் ரசிகர்கள் என்ற ஒரு போர்வையில் மங்காத்தா கொண்டாடி தீர்க்கப்பட்டது. அதற்கு முந்தைய வருடமே, அதாவது 2010ம் ஆண்டே அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டத்தையும் வேண்டாமென துறந்தார் அஜித்.
சினிமாவில் தனக்கென தனி முத்திரையை பதித்து வரும் அஜித், சினிமாவில் நடிப்பதோடு சரி. இசை வெளியீடு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பட விளம்பரங்கள் எதற்கும் தலையை காட்டமாட்டார். ஆனால் அவருக்கான வரவேற்பு துளியளவும் குறையாத நிலையில் அது குறைகூற முடியாத வழக்கமாகவும் உள்ளது. இந்த நேரத்தில் தன்னுடைய பட்டப்பெயர்களையும் துறந்துள்ளார் அஜித்குமார். சினிமா என்பதைக் கடந்து அஜித், தனக்கு பிடித்தமான வேலைகளில் ஆர்வமாக ஈடுபடுபவர். சினிமாவில் நடிப்பதை தன் தொழிலாக கருதும் அஜித், ஓய்வு நேரங்களில் குடும்பத்துடனும், தனக்கு பிடித்ததையும் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.