அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் டிசைன் இன்று இரவு வெளியாகவிருக்கிறது. இது குறித்து ட்விட்டர் பக்கத்தில், வெளியாகியுள்ள செய்தியில் வலிமை டிசைன் இன்று இரவு 9.45 மணிக்கு வெளியாகிறது. @a2studoffl என்ற ஹேண்டிலில் கவனிக்கவும் எனப் பதிவிடப்பட்டுள்ளது.


அதேபோல் இன்று மாலை 7 மணியளவில், வலிமை செகண்ட் சிங்கிள் சோனி மியூஸிக் சவுத்தில் வெளியாகிறது. @SonyMusicSouth சேனலை ரசிகர்கள் கூர்ந்து கவனிக்கவும் எனத் தகவல் பகிரப்பட்டுள்ளது.


#Valimai2ndSinglePromo, #Valimai, #Ajithkumar, என்ற ஹேஷ்டேகை தல ரசிகர்கள் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர். 
இதனையடுத்து அஜித் ரசிகர்கள் மரண வெயிட்டிங், வலிமை பொங்கல் மேனியா ஸ்டார்ட்ஸ் என்றெல்லாம் ரசிகர்கள் கருத்துகளைப் பகிர்ந்து தங்கள் உணர்வுகளைப் பதிவு செய்து வருகின்றனர்.


ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் 'நேர்கொண்ட பார்வை'. இந்தப் படத்தைத் தயாரித்து வெளியிட்டவர் நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர். 'பிங்க்' படத்தின் ரீமேக்கான இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.




இதனைத் தொடர்ந்து 'வலிமை' படத்திலும் அஜித் - வினோத் - போனிகபூர் கூட்டணி இணைந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் அஜித்துடன் ஹுமா குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்ததிலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்ததால் அஜித் ரசிகர்கள் கிரிக்கெட் வீரர்களிடமெல்லாம் வலிமை அப்டேட் குறித்து கேட்டுவந்தனர். இப்படிப்பட்ட சூழலில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன் வெளியாகி படு வைரலானது. அதனையடுத்து படத்தின் ஒரு பாடலும் வெளியாகி வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, படத்தின் Glimpse வெளியாகி அஜித் ரசிகர்களை கொண்டாட்டத்தின் உச்சத்திற்கு எடுத்து சென்றது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்தது. 


வலிமை படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தை முடித்துவிட்டு மீண்டும் அஜித் தனது கால்ஷீட்டை இயக்குநர் ஹெச். வினோத்துக்கே கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இயக்குநர் சிவாவுக்கு அடுத்து அஜித்துடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக பணியாற்றும் இயக்குநர் என்ற பெயரை ஹெச். வினோத் பெற்றிருக்கிறார். 




வலிமை பொங்கலுக்கு வெளியாவது போல் விஜய்யின் பீஸ்ட் திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தல, தளபதி ரசிகர்களுக்கு மாஸு, சினிமா ரசிகர்களுக்கு ட்ரீட்டு என இந்தப் பொங்கல் தித்திப்பாக இருக்கப்போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை போங்கள்.