ஜூலை 1ம் தேதி வெள்ளிக்கிழமையான நாளை 3 முக்கியமான திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன.
ஜூன் மாதம் வெளியான திரைப்படங்கள்:
கமல்ஹாசன் நடித்த விக்ரம், நானியின் அடடே சுந்தரா, நயன்தாராவின் ஓ2, விஜய் சேதுபதியின் மாமனிதன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் திரையரங்குகளில் கடந்த மாதம் வெளியாகின. இதில் விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதால், இப்படம் திரையரங்குகளை ஆக்கிரமித்திருந்த நிலையில் வெகுசில படங்களே வெளியாகியிருந்தன. குறிப்பாக விக்ரம் திரைப்படத்தின் ரிலீசுக்கும் ஜூன் 24ம் தேதிக்கும் இடையில் 4 திரைப்படங்கள் மட்டும் வெளியாகியிருந்த நிலையில், கடந்த வாரம் 24ம் தேதி மட்டும் 4 படங்கள் வெளியாகின.
இந்த நிலையில், ஜூன் 1ம் தேதியான நாளை யானை, டி ப்ளாக், ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் ஆகிய 3 முக்கிய கோலிவுட் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன.
யானை:
இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய், சமுத்திரக்கனி, ப்ரியா பவானிசங்கர், ராதிகா சரத் குமார், யோகி பாபு, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இத்திரைப்படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவை எஸ்.கோபிநாத் செய்ய, எடிட்டிங்கை அந்தோணி செய்திருக்கிறார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் இரண்டு குடும்பங்களில் ஒரு குடும்பத்தில் உள்ள முக்கியநபர் உயிரிழப்பால் ஏற்படும் பிரச்சனையை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
டி ப்ளாக்:
எரும சாணி புகழ் யூடியூபர் விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கத்தில், அருள்நிதி, அவந்திகா மிஸ்ரா, கரு பழனியப்பன், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர்ந்து நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் டி ப்ளாக். க்ரைம் த்ரில்லர் வகை திரைப்படமான இதற்கு ரோன் எத்தன் யோஹான் இசையமைத்திருக்கிறார். படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, கணேஷ் சிவா எடிட்டிங் செய்திருக்கிறார்.
கடந்த 2010ம் ஆண்டு வம்சம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான அருள்நிதிக்கு இது பதினைந்தாவது படமாகும். கடந்த ஆண்டு வெளியான களத்தில் சந்திப்போம் படத்திற்குப் பிறகு இந்த ஆண்டு டி ப்ளாக் வெளியாகிறது.
ஒரு எஞ்சினியரிங் கல்லூரியில் உள்ள பெண்கள் விடுதியின் டிப்ளாக்கில் நடக்கும் கொடூர சம்பவங்களை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அருள்நிதியின் த்ரில்லர் திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.
ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்:
முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானியும், விகாஸ் எஞ்சினை கண்டுபிடித்தவருமான நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படத்தில், நம்பி நாராயணனாக மாதவன் நடித்திருக்கிறார். மாதவனுடன் சிம்ரன் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். ஸ்ரீஷா ரே ஒளிப்பதிவு செய்ய பிஜித் பாலா எடிட்டிங் செய்திருக்கிறார்.
இப்படத்திற்கான அறிவிப்பு 2018ம் ஆண்டே வெளியாகிவிட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது. ஒருவழியாக நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இத்திரைப்படத்தில், விக்ரம் சாராபாய், அருணன், கீதா நாராயணன், எபிஜே அப்துல்கலாம் உள்ளிட்ட பல விஞ்ஞானிகளின் கதாப்பாத்திரங்கள் இடம்பெற்றுள்ளதோடு, சமீபத்தில் இப்படம் தொடர்பான விழாவில் மாதவன் பேசியது சமூக வலைதளங்களில் கேலிக்குள்ளான நிலையிலும், அது தொடர்பாக மாதவனின் பதிலடி என்று இப்படம் லைம்லைட்டிலேயே இருப்பதால் இதற்கான் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.