2023ம் நிதியாண்டிற்கான முதலாம் காலாண்டின் முடிவில் 2022 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 3 முக்கிய வருமான வரி மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன.
அமலுக்கு வரும் புதிய வரிவிதிப்பு:
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் முக்கியமாக வருமானவரி தொடர்பான அறிவிப்புகளையும் வெளியிட்டர்.
இந்தநிலையில், வருமான வரி தொடர்பான நிதியமைச்சரின் 3 அறிவிப்புகளானது இரண்டாம் காலாண்டின் தொடக்கத்தில் அமலுக்கு வருகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டையுடன், PAN அட்டையை இணைப்பதற்கான அபராதகட்டணம் உயர்வு, கிரிப்டோகரன்சிக்கான வரி உயர்வு மற்றும் தனியார் மருத்துவர்கள் மற்றும் இன்ஃப்ளூயன்சர்களுக்கான வருமான வரியில் மாற்றம் ஆகியவை ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
நாளை முதல் இரட்டிப்பு அபராதம்:
ஆதார் அட்டையுடன் பான் அட்டையை இணைப்பதற்கான கால அவகாசம் இந்தாண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அப்போதும் இணைக்காதவர்கள் ரூபாய் 500 அபராதக்கட்டணத்துடன் இணைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியாகி 3 மாதங்கள் முடிவடைந்துவிட்ட நிலையில் ஜூலை 1 முதல் பான் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கு கூடுதல் அபராதக் கட்டணமாக 500 ரூபாய் சேர்த்து 1000 ரூபாயாக செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
500 ரூபாய் அபராதத்துடன் பான் அட்டையை இணைப்பதற்கு இன்றே கடைசி நாள். நாளை முதல் 1000 ரூபாய் அபராதம் செலுத்தி இணைக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
க்ரிப்டோ மீது புதிய வரி:
இந்த ஆண்டு பட்ஜெட்டின் போது க்ரிப்டோ கரன்சி பரிமாற்றங்களுக்கும் மத்திய அரசு வரி விதிப்பை அமல்படுத்தியது. க்ரிப்டோ கரன்சியை மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என்றாலும் வரிவிதிப்பு முறையை அமல்படுத்தியது. க்ரிப்டோ கரன்சி பரிவர்த்தனைக்கு 30% வரியை செலுத்த வேண்டும் என்று நிதியமைச்சர் அறிவித்தார். இந்த வரிவிதிப்பு ஏப்ரல் 1ம் தேதி அமலுக்கு வந்த நிலையில், வரும் ஜூலை 1ம் தேதி முதல் 30% வரியுடன் கூடுதலாக 1 சதவீதம் டிடிஎஸ் வரி உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர் செய்யும் பரிவர்த்தனையில் லாபமோ நஷ்டமோ அவர் 1 சதவீதம் டிடிஎஸ் ஐ செலுத்த வேண்டும். இருப்பினும், ஒரு முதலீட்டாளர் இழப்புகள் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளில் விதிக்கப்பட்ட TDS-ஐத் திரும்பப் பெற முடியும். க்ரிப்டோ கரன்சியில் முதலீடு செய்பவர்கள் வருமான வரியினை தாக்கல் செய்ய வேண்டும்.
தனியார் மருத்துவர்களுக்கு வரி:
ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் மற்றொரு மாற்றம் தனியார் மருத்துவர்கள் மற்றும் இன்ஃப்ளூயன்ஸர்களுக்கானது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் வருமானவரிச் சட்டம் 1961ல் 194 ஆர் என்ற புதிய பிரிவை இணைத்தது. இந்த புதிய பிரிவானது மருந்து விற்பனையாளர்கள் மூலம் மருத்துவர்களுக்கு கிடைக்கும் மருந்து மதிப்பு ஒரு நிதியாண்டில் 20 ஆயிரம் ரூபாயைத் தாண்டினால் அதற்கு 10 சதவிதம் டிடிஎஸ் வரி விதிக்கவும், சமூக வலைதள இன்ஃப்ளூயன்ஸர்கள் 20 ஆயிரத்திற்கும் மேல் வருமானம் எட்டினால் அவர்களுக்கும் 10 சதவீதம் வரி விதிக்கவும் இந்த புதிய பிரிவு வழிவகை செய்கிறது.
உதாரணமாக ஒரு தனியார் மருத்துவமனை நடத்தும் மருத்துவர் மருந்து நிறுவனங்களிடம் பெறும் சாம்பிள் மருந்துகளின் மதிப்பு ஒரு நிதியாண்டிற்கு 20 ஆயிரம் ரூபாயைத் தாண்டினால், அவர்கள் 10சதவீதம் டிடிஎஸ் ஐ செலுத்த வேண்டும். ஒருவேளை அந்த மருத்துவர் தனியார் மருத்துவமனையில் பணியாற்றினால் இந்த வரியானது மருத்துவமனையின் மீது விதிக்கப்படும். ஆனால், இந்த வரிவிதிப்பு முறை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.