வழக்கு:
கடலூர் மாவட்டம் வடலூரில் வழிபாட்டிற்காக உருவம் எதுவும் நிறுவப்படாத சத்தியஞான சபையில் சிவலிங்கம் மற்றும் சில விக்கிரகங்களை சபாநாத ஒளி சிவாச்சாரியார் என்பவர் கடந்த 2006-ல் நிறுவினார். சிலை வைக்கப்பட்டது வள்ளலாரின் கோட்பாடுகளுக்கு முரணானது என்று, இந்து அறநிலையத் துறையிடம் பக்தர்கள் முறையீடு செய்தனர். இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்தறை நடத்திய விசாரணையில், 1872 ஆம் ஆண்டு சத்திய ஞான சபை நிறுவப்பட்ட பின்னர் வழிபாட்டு முறைகள் வகுக்கப்பட்டு, ஜோதி வடிவிலேயே இறைவனை வழிபடும் முறையைத் தவிர வேறு வழிபாட்டு முறைகள் பின் பற்றப்படவில்லை என்பதால் லிங்க வழிபாடு, வள்ளலார் வகுத்துள்ள விதிமுறைகளுக்கு முரணானது என்று தெரிவித்து, சன்மார்க்க சங்கத்தைச் சேர்ந்தோர் வள்ளலார் வகுத்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறநிலையத்துறை இணை ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.
மறு ஆய்வு மனு:
இணை ஆணையரின் இந்த உத்தரவை எதிர்த்து மறு ஆய்வு மனுக்களை இந்து அறநிலையத் துறையின் ஆணையரிடம் சிவாச்சாரியார் அளித்தார். அந்த மனுவை, தள்ளுபடி செய்தும் இணை ஆணையரின் தீர்ப்பை உறுதி செய்தும், இந்து அறநிலையத்துறை ஆணையர் தீர்ப்பு வழங்கினார்.
தனி நீதிபதி:
இந்து அறநிலையத்துறை ஆணையர் தீர்ப்பு வழங்கியதையடுத்து, சபாநாத ஒளிசிவாச்சாரியார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சந்துரு, கடந்த 2010 ஆண்டு வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார். உருவ வழிபாட்டை ஏற்காமல், ஜோதி என்ற பெயரில் நெருப்பை வழிபடுவது தான் வள்ளலாரின் கோட்பாடு என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.
மேல் முறையீடு:
தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து சிவாச்சாரியார் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த 2010 ம் ஆண்டு முதல் விசாரணை நடைபெற்று வந்த இந்த வழக்கில் நீதிபதிகள் டி.ராஜா மற்றும் தமிழ்செல்வி அமர்வு இன்று தீர்ப்பு வழங்கினயது. அதில், வள்ளலார் சத்திய ஞான சபையில் சிலை வழிபாடு நடத்தக்கூடாது என்ற தனி நீதிபதியின் உத்தரவு சரிதான் என்று தீர்ப்பளித்து, மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Also Read: “அன்புள்ள அண்ணா.. நீங்கள் அதிமுக ஒருங்கிணைப்பாளரே கிடையாது” - ஓபிஎஸ்க்கு இபிஎஸ் பதில் கடிதம்...
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்