பிரப்ல ஃபிரெஞ்சுத் திரைப்பட இயக்குநரான ஸேவியர் டோலன் (Xavier Dolan) திரைப்படங்கள் எடுப்பதை நிறுத்திக்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஃபிரேஞ்சு மொழியை பூர்வீகமாகக் கொண்ட கனடாவைச் சேர்ந்த இயக்குநர் ஸேவியர் டோலன். மாம்மி, ஐ கில்டு மை மதர், லாரன்ஸ் எனிவேஸ், ஹார்ட்பீட்ஸ், மாத்தியாஸ் & மாக்ஸிம் ஆகிய முக்கியமான படங்களை இயக்கியவர்.
தனித்துவவான கதை சொல்லும் முறை, வண்ணமயமான காட்சியமைப்புகள், அதி தீவிரமான கதைக்களங்கள் மற்றும் தனித்துவமான ஸ்டைலுக்காக அறியப்படும் ஸேவியர் டோலன், படங்கள் இயக்குவதை நிறுத்திக் கொள்ளப்போவதாக தகவல் வெளியிட்டுள்ளார் . இந்தத் தகவல் அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஏமாற்றமே மிச்சம்
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: “யாருமே பார்க்காத ஒரு படத்தை இரண்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு இயக்குவதை நான் விரும்பவில்லை. என்னுடைய மொத்த ஆற்றலையும் செலுத்தி நான் எடுக்கும் படங்கள் எனக்கு ஏமாற்றமே தருகின்றன. சில நேரங்களில் நான் படமெடுக்கும் முறை தவறோ என்றுகூட நான் யோசிக்கிறேன், அது உண்மை இல்லையெனத் தெரிந்தும்” எனப் பதிவிட்டுள்ளார் ஸேவியர் டோலன்.
இந்நிலையில், தனது மனவருத்தத்தை தெரிவித்த அவருக்கு அவரது ரசிகர்கள் தங்களது அன்பை தெரிவித்து வருகிறார்கள். பலர் அவரை தொடர்ந்து படங்கள் எடுக்க வேண்டும் என்றும், ஒருபோது அவர் படங்கள் எடுப்பதை நிறுத்தக் கூடாது என்று கெஞ்சியும் வருகிறார்கள்.
ஸேவியர் டோலன்
ஸேவியர் டோலன் தனது முதல் படத்தை இயக்கியது அவரது 19 ஆவது வயதில். ‘ஐ கில்டு மை மதர்’ என்கிற படத்தை தானே எழுதி, இயக்கி அதில் நடித்தும் இருந்தார் அவர். இந்தப் படம் அவருக்கு உலக அளவிலான அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது.
இந்தப் படத்திற்கு சர்வதேச கான் திரைப்பட விழாவில் மிகப்பெரும் பாராட்டுக்கள் கிடைத்தன. மாற்று பாலினத்தவர்களின் வாழ்க்கையை அதில் இருக்கும் சிக்கல்களை அழகியல் தன்மையோடு சித்தரித்ததில் முக்கியமானவர் ஸேவியர் டோலன்.