மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் உருவான மாமன்னன் படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தாழ்த்தப்பட்ட சமூகத்தை மையக்கருத்தாக வைத்து எடுக்கப்பட்ட மாமன்னன் திரைப்படம் அதிமுகவை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் தனபாலின் வாழ்க்கையை கூறுவதாக இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. 


மாமன்னன் கதை:


இந்த நிலையில், தனியார் ஊடகத்துக்கு பேட்டியளித்த முன்னாள் சபாநாயகர் தனது கடந்த கால அனுபவங்களையும், மாமன்னன் கதை தன்னுடையது தானா? என்பதை பகிர்ந்து கொண்டார். அவர் பேசியதாவது, ”நான் தாழ்த்தப்பட்டவனாக இருப்பதாலும், நான் சபாநாயகராக இருந்ததாலும், மாமன்னன் கதையின் முடிவும் அப்படி இருப்பதால் அது என்னோட கதை என கூறப்படுகிறது. ஆனால், நான் இன்னும் படத்தை பார்க்கவில்லை. படம் பார்த்தால் தான் தெரியும். ஒருவேளை மாமன்னன் என்னை தழுவி எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும், அதன் வெற்றி அம்மாவையே சேரும். ஏனெனில், படத்தில் சொல்ல வருவதை 10 ஆண்டுகளுக்கு முன்பே என்னை சபாநாயகராக அமரவைத்து ஜெயலலிதா அழகு பார்த்தார். 


மாமன்னன் என்னோட கதை மாதிரி இருந்ததாக பலரும் தொலைபேசியில் அழைத்து பகிர்ந்து கொள்கின்றனர். என்னை சார்ந்த கதையில் உதயநிதி நடித்து படமாக எடுத்து இருக்கிறார் என்பது தான் எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. எனது இளம் வயதில் கல்லூரி படிக்கும் போது முதல் முறையாக எம்ஜிஆர்-ஐ பார்த்தேன்.  உற்சாகத்தில் அவரை கட்டிப்பிடித்து விட்டேன். பிறகு எம்.ஜி.ஆர். தனிக்கட்சி ஆரம்பித்ததும் அவரின் செல்லப்பிள்ளையாகவே மாறினேன். அதனால், கட்சியில் என்னை யாரும் ஒதுக்கி வைக்கவில்லை. சங்ககிரியில் எம்.எல்.ஏ.வாக வெற்றிப்பெற்றதும் எம்ஜிஆருக்கு நன்றி சொல்ல போனேன். அப்போது ஏற்பட்ட கார் விபத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டதால், படுக்கையில் இருந்தப்படி எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றேன். 


கசப்பான அனுபவங்கள்:


எம்ஜிஆருக்கு பிறகு 2001ம் ஆண்டு சங்ககிரியில் வெற்றிப்பெற்றால் என்னை உணவு பாதுகாப்புத்துறை அமைச்சராக அம்மா அறிவித்தார். அந்த துறை ஒதுக்கப்பட்டதற்கு பின்னால் பல கசப்பான அனுபவங்களும் உள்ளன. அதையெல்லாம் இப்போது பேச விருப்பம் இல்லை. என்னை அமைச்சராக அறிவிப்பதற்கு முன்பு என்னை அழைத்த அம்மா, உங்களுக்கு தாழ்த்தப்பட்ட துறை வேண்டாம் என்றதுடன், கூட்டுறவுத்துறையுடன் உணவு பாதுகாப்பு துறையை சேர்த்து கொடுத்தார். பிறகு, துணை சபாநாயகராக இருந்த எனது பணியை பார்த்த ஜெயலலிதா, அடுத்த சபாநாயகர் நீங்கள் தான் என்றார். உங்கள் மீது இருக்கும் நம்பிக்கையில் இந்த பொறுப்பை தருவதாக கூறினார்,


அழுதுவிட்டேன்:


2016ம் ஆண்டு நடந்த தேர்தலுக்கு பிறகு மறுபடியும் என்னை சபாநாயகராக ஜெயலலிதா அறிவித்தார். மீண்டும் சபாநாயகராக அந்த இடத்தில் அமரும்போது என்னையும் மீறி அழுதுவிட்டேன். ஜெயலலிதாவை மரியாதையுடன் பார்த்து பழக்கப்பட்டதால் அவர் முன்பு சபாநாயகர் நாற்காலியில் என்னால் சரியாக அமர முடியவில்லை. நான் நாற்காலி நுனியில் அமரும்போது, என்னை அழைத்து பேசிய  அம்மா, நீங்க சட்டமன்றத்தின் தலைவர். நீங்கள் சொல்வதை தான் நாங்கள் கேட்க வேண்டும் என கூறி தைரியம் அளித்தார். நான் சபாநாயகராக வரும் போது எல்லாருடன் அம்மாவும் எழுந்து நிற்பதால், எனக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது.


ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. அப்போது சட்டமன்றத்தில் நடந்த அமளியில் என் சட்டையை கிழித்து, எனது நாற்காலியில் அமர்ந்து கலாட்டா செய்தனர். ஆனாலும், யார் மீதும் நடவடிக்கை எடுக்காமல் மன்னித்து விட்டதால் எல்லாருக்கும் என்மீது தனிப்பட்ட வகையில் பாசம் உள்ளது” என்றார்.  இறுதியாக,


                       “ யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் 
                         சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு"   


என்ற திருக்குறளை கூறி உரையாடலை முடித்தார்.