முன்னாள் நடிகை சனா கானுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.


சிலம்பாட்டம் பட நடிகை


கோலிவுட்டில் நடிகர் சிலம்பரசனுடன் சிலம்பாட்டம் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அதிரடி எண்ட்ரி கொடுத்து ஈர்த்தவர் நடிகை சனா கான். தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஈ, தம்பிக்கு எந்த ஊரு, பயணம் உள்ளிட்ட படங்களில் நடித்த சனா கான், தமிழ் தாண்டி பாலிவுட், டோலிவுட்டிலும் பல படங்களில் நடித்துள்ளார்.


மேலும், நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கிய இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6ஆவது சீசனில் கலந்துகொண்ட சனா கான், இரண்டாவது ரன்னராக உருவெடுத்து பல ரசிகர்களைப் பெற்றார். 


பிக் பாஸ் பிரபலம்


இந்நிலையில், இஸ்லாமியரான சனா கான் கடந்த சில ஆண்டுகளாக சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இருந்து விலகி, முழுமூச்சாக இஸ்லாமிய மதத்தில் ஈடுபாடு கொண்டு வலம் வந்த வண்ணம் உள்ளார். மேலும் கடந்த 2020ஆம் ஆண்டு முஃப்தி அன்ஸ் சயத் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.


சினிமாவில் இருந்து விலகினாலும், தன் சமூக வலைதளப் பக்கத்தில் தொடர்ந்து ரசிகர்களுடன் உரையாடி வரும் சனா கான், முன்னதாக தான் கருவுற்றிருப்பதாக இணையத்தில் அறிவித்தார்.


ஆண் குழந்தை


இந்நிலையில், இன்று அவருக்கு  ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தன் சமூக வலைதளப் பக்கத்தில் சனா கான் பகிர்ந்துள்ளார். மேலும், “எங்கள் குழந்தைக்காக அல்லா எங்களை சிறந்தவர்களாக ஆக்குவாராக. உங்கள் அன்பு மற்றும் பிரார்த்தனைகளுக்கு நன்றி, அல்லா உங்களுக்கு நல்லவற்றை உண்டாக்குவாராக” என சனா கான் - அனஸ் சயத் தம்பதி பகிர்ந்துள்ளனர்.


இந்நிலையில், சனா கான் - அனஸ் சயத் தம்பதிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.


சர்ச்சையான வீடியோ


முன்னதாக கர்ப்பிணியாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த நடிகை சனா கானின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வந்தன. அவ்வாறு ரமலான் நோன்பு சமயத்தில் நோன்பு திறப்பதற்காக மசூதி ஒன்றுக்கு வருகை தந்த சனா கானை, அவரது கணவர் அனஸ் சயத் தரதரவென்று இழுத்துச் சென்ற வீடியோ இணையத்தில் சர்ச்சைக்குள்ளானது. 


“கர்ப்பமாக இருக்கும் பெண்ணை இப்படி மோசமாக இழுத்துச் செல்கிறார்” என அவரது ரசிகர்கள் கவலை தெரிவித்த  நிலையில், இதுகுறித்து சனா கான் விளக்கமளித்து பதிவிட்டார்.


தாங்கள் டிரைவருடனும் காருடனும் தொடர்பை இழந்து வெகு நேரமாக அயற்சியுடன் நின்றிருந்த நிலையில், கார் வந்ததும் தண்ணீர் குடிப்பதற்காகவும், காற்றோட்டமான இடத்துக்கு செல்வதற்காகவும் தன் கணவர் தன்னை பரபரவென அப்படி அழைத்துச் சென்றதாக சனா கான் விளக்கமளித்திருந்தார். இதனை அடுத்து இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.