'மயக்கும் பாடல்களுக்கு சொந்தக்காரர் சித் ஶ்ரீராம். இவரது குரலில் 'கடல்' படத்திலிருந்து 'அடியே' பாட்டு துவங்கும்போது இந்தக் குரலில் கரைந்து போகாதவர்கள் யாரும் இருக்கமுடியாது. 'ஐ' படத்தின் 'என்னோடு நீ இருந்தால்' பாட்டில் காதலின் வலியை உணர்ச்சி மிகுந்த வார்த்தைகளின் வழியே நமக்கு கடத்தியிருப்பார் சித். உச்சக்கட்ட காதலின் இன்பத்துக்கும் அதே காதலின் வலியை கடக்கவும் சித் எப்போதும் மருந்தாக இருப்பாரென்று அவரின் ரசிகர்களின் ப்ளேலிஸ்ட்டுகளே உணர்த்தும். சித்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரைக் கொண்டாடும் ஸ்பெஷல் பதிவு இது.
''பிறந்தது சென்னை மயிலாப்பூர். 1 வயசு இருக்கும்போதே யூ.எஸ். செட்டிலானவர். அம்மா கர்நாடக இசைப்பாடகி. இதனால மூன்று வயசுல இருந்தே அம்மாகிட்ட பாட்டு கத்துக்க ஆரம்பிக்கிறாரு சித். கர்நாடிக் ம்யூசிக்ல அம்மாவை மாதிரியே பெரிய தேர்ச்சியோட வெளிய வராரு. சொல்லப்போனா சித் ஶ்ரீராமின் முதல் குரு, அம்மா லதா ஶ்ரீராம். சித் ஸ்ரீராமுக்கு ஏக செல்லம் இவரின் தங்கை பல்லவி ஶ்ரீராம். தமிழ்ல சித் ஶ்ரீராமுக்கு உச்சரிப்புல பிரச்சனை வந்தா இவருடைய அம்மா லதா ஶ்ரீராம்தான் இதை சரி பண்ணுவாங்களாம். எப்போவும் மியூசிக் டவுட் க்ளியர் பண்றதும் லதா ஶ்ரீராம்தான். சின்ன வயசுல இருந்து இளையராஜா இசை மேல சித்துக்கு பெரிய ஈர்ப்பு இருந்திருக்கு. இதனாலயே தமிழ் சினிமால பாடகராவும், இசையமைப்பாளராவும் ஆகணும்னு சித் நினைச்சி இருக்கார். இளையராஜாவோட இசை பிடித்த அளவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஜாகீர் ஹுசைன் மியூசிக்கும் சித்தின் ஆல் டைம் ஃபேவரைட்.
இசையை சின்ன வயசுல இருந்தே கத்துக்கிட்ட சித் ஶ்ரீராம் பரதநாட்டியம் ஆடுறதுலயும் விருப்பமுள்ளவர். அரங்கேற்றம் முடிச்சிருக்கும் ஶ்ரீராம், மேடை கச்சேரிகளில் சில நேரங்களில் பரதநாட்டியமும் ஆடுவதுண்டு. இந்தியாவுக்கு வருஷத்துக்கு ஒரு முறை வருவதை வழக்கமா வெச்சிருக்கிற ஶ்ரீராம், வரும்போதேல்லாம் இங்கே மியூசிக் ஆல்பம், மேடை கச்சேரிகள் பண்ணிட்றாரு. இப்படி ஒரு முறை சித் ஶ்ரீராம் பண்ணுன கச்சேரியை பார்த்துதான் ஏ.ஆர்.ரஹ்மான் சித் ஶ்ரீராமை தொடர்புகொண்டு பேசியிருக்கார். ரஹ்மானின் மெசேஜ் பார்த்தவுடன் மிகவும் பரவசம் அடைஞ்ச சித்துக்கு கொஞ்ச நேரத்துக்கு நிதானமே இல்லயாம். 'என்னோட இசையில் ஒரு பாட்டு பாட முடியுமானு' ரஹ்மான் கேட்க உடனே ஓகே சொன்ன சித்துக்கு ஸ்கைப் வழியா எப்படி பாடணும்னு முதல்ல சொல்லி கொடுத்திருக்கார் ரஹ்மான்.