கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இன்னும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில் சிங்கப்பூர் நாட்டில் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் சிலருக்கு இம்முறை அங்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக அங்கு பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இந்தச் சூழலில் இது தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு கருத்தை நேற்று தெரிவித்திருந்தார். அதில், "சிங்கப்பூரில் தற்போது பரவும் புதிய விதமான கொரோனா வைரஸ் குழந்தைகளை தாக்கி வருகிறது. எனவே மத்திய அரசு உடனடியாக சிங்கப்பூருடன் விமான போக்குவரத்தை நிறுத்த வேண்டும். அத்துடன் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார். இது சிங்கப்பூர் அரசு வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் அரசு இந்திய தூதரை அழைத்து இந்த விவகாரம் தொடர்பாக கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. அத்துடன் சிங்கப்பூரில் தற்போது புதிய விதமாக கொரோனா வைரஸ் எதுவும் பரவவில்லை. ஏற்கெனவே பரவி வரும் பி.1.617.2 ரக வைரஸ் தான் தற்போது சிங்கப்பூரில் உள்ளது என அந்நாட்டு அரசு தெரிவித்தது. சிங்கப்பூர் அரசு பதிவு செய்திருந்த கண்டனத்தை மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவும்-சிங்கப்பூரும் நண்பர்களாக செயல்பட்டு வருகிறோம். மேலும் இக்கட்டான சூழலில் இந்தியாவிற்கு ஆக்சிஜன் தந்து உதவியதை இந்தியா எப்போதும் மறக்காது. இந்த சமயத்தில் தேவையில்லாமல் கருத்து தெரிவித்து இருநாட்டு உறவுகளில் விரிசல் ஏற்படுத்தும் வகையில் யாரும் செயல்பட கூடாது.
இந்த நேரத்தில் நான் ஒன்றை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். டெல்லி முதலமைச்சர் இந்தியாவிற்காக பேசவில்லை என்பது தான் அது"எனப் பதிவிட்டுள்ளார். டெல்லி முதலமைச்சரின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.