நாட்டுப்புற பாடகி ராஜலட்சுமி கதாநாயகியாக அறிமுகமாகும் படம் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக கிராமிய பாடல்களை முன்னிறுத்தி பிரபலமானவர்கள் செந்தில் ராஜலட்சுமி தம்பதியினர். கிராமத்து தெம்மாங்கு பாடல்கள் பாடுவதில் கில்லாடியான இவர்கள், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிறகு பல வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இசைக்கச்சேரிகளில் பாடுவதோடு மட்டுமல்லாமல், படங்களிலும் பாடி வருகின்றனர்.
அந்த வகையில் பிரபுதேவா நடித்த ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் செந்தில் மற்றும் ராஜலட்சுமி ஆகிய இருவரும் இணைந்து பாடிய சின்ன மச்சான்..செவத்த மச்சான்.. புஷ்பா படத்தில் ராஜலட்சுமி பாடி ‘வாயா சாமி’ பாடல் உள்ளிட்டவை பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டடித்தது. இந்த நிலையில் பாடகி ராஜலட்சுமி திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
கதாநாயகியாக அறிமுகம்
லைசென்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப்படத்தை கவுண்டமணி நடிப்பில் வெளியாகிய ‘ எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ படத்தை இயக்கிய கணபதி பாலமுருகன் இயக்குகிறார். நார்மல் ஃபிலிம் பேக்டரி சார்பாக இளஞ்செழியன் தனது நண்பர்களுடன் இணைந்து இந்தப்படத்தை தயாரிக்க உள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ராதாரவி நடிக்கும் இந்தப்படத்தில், அறிமுக நடிகரான விஜய் பாரத் நடிக்கிறார். இவர்களுடன் மதுரை ரிஷி, குழந்தை நட்சத்திரம் அதிதி பாலமுருகன் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளார்.
ராஜலட்சுமி பேட்டி
இது குறித்து ராஜலட்சுமி கூறும் போது, “நான் நடிக்கும் முதல் படம். இந்தப்படத்தில் பாரதி என்ற முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இந்தப்படத்தில் நடிப்பது எனக்கு சந்தோஷமாகவும், பயமாகவும் இருக்கும் அதே நேரத்தில் பொறுப்பாகவும் இருக்கிறது. ராதாரவி போன்ற பெரிய நடிகர்களுடன் நடிப்பது எனக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுத்து இருக்கிறது.
தொடர்ந்து செந்தில் பேசும் போது, “ விமர்சனங்கள் வரத்தான் செய்யும். ஆனால் எப்போதும் நாங்கள் எங்கள் வேலையை சரியாக செய்ய வேண்டும் என்பதை மட்டும் கொள்கையாக வைத்து இருக்கிறோம்.” என்றார்.