80களை போலவே, 90களின் துவக்கமும் தமிழ் சினிமாவில் நல்ல படங்களை கொண்டாட செய்தது. யார் நடிகர், யார் இயக்குனர் என்பதை கடந்து நல்ல படங்கள் கொண்டாடப்பட்டன. அது போன்ற ஒரு படம் தான் 1991ல் வெளியான தாலாட்டு கேட்குதம்மா. இன்று நடிகராக அறியப்படும் ராஜ்கபூர் இயக்கிய முதல் படம். சிவாஜி புரொடக்ஷன் தயாரிப்பில் பிரபு நடித்த படம். அறிமுக இயக்குனருக்கு வெற்றியை தந்த படம். அதைக் கடந்து தாலாட்டு கேட்குதம்மா படம் தொடங்கியதில் இருந்து, முடியும் வரை நிறைய சுவாரஸ்யங்களை கொண்டிருந்தது. அவற்றை இன்றைய ப்ளாஷ்பேக் பகுதியில் பார்க்கலாம். 




முரளிக்கு சொன்ன கதை!


உதவி இயக்குனராக நல்ல அறிமுகம் இருந்தாலும் பட வாய்ப்பை பெறுவது அவ்வளவு எளிதல்ல. தேனி மாவட்டம் கோம்பையை சேர்ந்த ராஜ்கபூரும் அதற்கு விதிவிலக்க. ஆனாலும் ஒரு படத்தில் பணியாற்றும் போது, அதிலிருந்து கிடைக்கும் நட்பு, நமக்கான வாய்ப்பை உருவாக்கும் என்கிற தமிழ் சினிமாவின் விதிகளும் அவரை கைவிடவில்லை. அப்படி தான் நடிகர் பிரபு அறிமுகம் கிடைக்கிறது. 5 ஆண்டுகளாக பிரபு உடன் பயணிக்கிறார். பிரபுவிற்கும் படம் செய்ய ஆசை. ஒவ்வொரு முறையும் தயாரிப்பாளர்களை பரிந்துரை செய்கிறார். ஆனால், நேரம் கூடவில்லை. பிரபு உடன் இருந்ததால் சிவாஜி புரொடக்ஷனுடன் ராஜ்கபூருக்கு நல்ல நெருக்கம் இருந்தது. சிவாஜி புரொடக்ஷன் குமார் என்பவர், வெளிநாட்டிலிருந்து வந்த கிரி என்பவரை அறிமுகம் செய்து ஷாம் கிரியேஷன்ஸ் என்கிற பெயரில் படம் செய்யப் போவதாகவும், முரளி, இளையராஜா கால்ஷீட் இருப்பதாகவும், கதை இருந்தால் கூறவும் என்கிறார். சிவாஜி புரொடக்ஷனில் மூவரும் அமர்ந்து பேசுகிறார்கள். 




தட்டிப் பறித்த பிரபு!


அந்த நொடி வரை ராஜ்கபூரிடம் கதை இல்லை. கதை கேட்பவர்கள் படம் எடுப்பார்கள் என்கிற நம்பிக்கையும் இல்லை. அதனால் தனக்கு தெரிந்த ஒரு கதையின் முதல் சீன், நடு சீன், கிளைமாக்ஸ் சீனை மட்டும் சொல்கிறார். குமாரும், கிரியும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். அப்போது அப்பகுதியை பிரபு கடக்கிறார். ‛என்ன ஒரே சிரிப்பா இருக்கு...’ என பிரபு கேட்க, ‛பிரபு... இந்த கதையை கேட்டுப் பாரு...’ என்கிறார் குமார். ‛நம்ம கதையே சொல்லலையே... சீன் தானே சொன்னோம்...’ என, திகைத்து போய் நிற்கிறார் ராஜ்கபூர். அதே சீன் மீண்டும் பிரபுவிடம் சொல்லப்படுகிறது. அதை கேட்டு விட்டு, ‛சரி.. நீ காலையில் போய் அண்ணனை பாரு...’ என கூறிவிட்டு பிரபு புறப்படுகிறார். ‛ஏங்க... கதை எங்களுக்கு சொன்னதுங்க... நீங்க அண்ணனை பார்க்க சொல்றீங்க...’ என கிரி கேட்க, சிரித்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தார் பிரபு. ஆனாலும் ராஜ்கபூருக்கு ஒரே குஷி. 




கதை கேட்காமல் வாங்கிய அட்வான்ஸ்!


இப்போது பிரபு சொன்னது போல, மறுநாள் அவரது அண்ணன் ராம்குமாரை சந்திக்கிறார் ராஜ்கபூர். ‛தம்பி சொன்னான்... மூன்று சண்டைகள் வெச்சிடு... மான் கொம்பு அது இதுனு கொஞ்சம் டிப்ரெண்ட்டா இருக்கட்டும்...’ என ராம்குமார் கூற, அப்போதும் யாரும் கதை கேட்டவில்லை என்கிற மகிழ்ச்சியோடு அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு புறப்பட்டார் ராஜ்கபூர். இப்போ பிரபுவை பார்க்க வேண்டும். மாதம்பட்டி சிவக்குமார் தயாரிப்பில் மனோஜ்குமார் இயக்குவதாக இருந்த பிரபு படம் டிராப் ஆகியிருந்தது. அதற்கான டேட் மட்டும் தான் பிரபுவிடமும் இருந்தது. ‛எத்தனை நாள்ய்யா உனக்கு டேட் வேணும்...’ என கேட்கிறார் பிரபு. ‛ஒரு 20 நாள் கொடுங்க...’ என்கிறார் ராஜ்கபூர். ‛20 நாளா... எப்படியா முடியும்?’ என கேட்கிறார் பிரபு, ‛முடிச்சிடலாம்...’ என உறுதி கொடுக்கிறார் ராஜ்கபூர். அந்த நொடி வரை கதை பற்றிய லைன் மட்டுமே உள்ளது, சீன் இல்லை.




 


குஷ்பூ வேண்டாம்... தேவிகா மகளை போடு! 


சின்னத்தம்பி ரீலீஸ் ஆக காத்திருக்கிறது. அதற்கான பணிகளில் பிரபு உள்ளார். அதற்குள் கதை ரெடியாக வேண்டும். ஒரு புறம் கதிர் இயக்கும் இதயம் படத்திற்கு ராஜ்கபூர் குரூப் தான் கதை டிஸ்கஷன் நடத்தி வருகிறது. இப்போது தாலாட்டு கேட்குதம்மா பணி வேறு வந்துவிட்டது. இரவு முழுவதும் இதயம் டிஸ்கஷன், பகலில் தாலாட்டு கேட்குதம்மா டிஸ்கஷன் என ஷிப்ட் போட்டு இரவும், பகலுமாக பணியாற்றி ஒரு வழியாக கதையை முழுமையாக முடித்தார் ராஜ்கபூர். இப்போது ஹீரோ பிரபு என்பது உறுதியாகிவிட்டது. அதுவும் சிவாஜி புரொடக்ஷன். என்னதான் நிர்வாகத்தை மகன்கள் கவனித்தாலும், சிவாஜியின் கண்காணிப்பு இல்லாமல் அங்கு எதுவும் நடக்காது. ராஜ்கபூரிடம் படத்தின் விபரங்களை கேட்கிறார் சிவாஜி. இப்போதும் கதை கேட்கப்படவில்லை. ‛யாரை போட்ருக்க...’ என ஹீரோயின் பற்றி கேட்கிறார் சிவாஜி. குஷ்பூ பெயரை ராஜ்கபூர் சொல்கிறார். ‛ம்... வேணாம் வேணாம்... வேற ஆளை போடலாம்...’ என்கிறார் சிவாஜி. வேறு இரு நடிகைகள் பெயரை ராஜ்கபூர் கூற, அதில் ஒருவர் கனகா. ‛கனகா யாரு... தேவிகா மகள் தானே... சரி.. சரி.. தேவிகா மகளையே போடு...’ என கனகாவிற்கு பச்சை கொடி காட்டி, குஷ்பூவுக்கு ரெட் கார்டு போட்டார் சிவாஜி. ஏப்ரல் 14ம் தேதி சின்னத்தம்பி ரிலீஸ், அதே நாளில் தாலாட்டு கேட்குதம்மா சூட்டிங் ரெடி. 




ட்ராப் ஆக இருந்த படம்!


பொள்ளாட்சியில் சூட்டிங். கிளாப் அடித்துவிட்ட சிவாஜி கிளம்பிவிட்டார். சைக்கிளில் கனகாவை ஏற்றிக் கொண்டு பிரபு வரும் காட்சி. முதல் நாள் கொஞ்சம் ‛வார்ம் அப்’ ஆகலாம் என்கிற ஆசையில் ஒரே காட்சியை பல கோணங்களில் ராஜ்கபூர் எடுத்துள்ளார். ஒரே நாளில் 1500 அடி ரீல் வீண். ‛என்னய்யா இவன் இப்படி படம் எடுக்கிறான்....’ என சிவாஜி புரொடக்ஷன் ஆட்களுக்கு சந்தேகம் வந்துவிட்டது ‛சரி விடு... ஒரு நான்கு நாட்கள் பார்ப்போம்...’ என்று அவர்கள் முடிவு செய்கிறார்கள். இது ராஜ்கபூர் காதுக்கும் வருகிறது. ‛என்னடா... கெடச்ச வாய்ப்பு போய்டும் போலயே...’ என பயந்த அவர், மறுநாளே சூட்டிங் முறையை மாற்றினார். இரண்டாவது நாளில் அனல் பறக்கத் துவங்கியது சூட்டிங் ஸ்பார்ட். ரிவர்ஸ் முறையில் எல்லாம் சூட்டிங் எடுக்கத் தொடங்கினார் ராஜ்கபூர். ‛யோவ்... என்னய்யா இவன் தலைகீழா படம் எடுக்கிறான்...’ என கவுண்டமணி புலம்பும் அளவிற்கு சூட்டிங் ஜெட் வேகத்தில் போனது. சின்னதம்பியின் வெற்றி அந்த சூட்டிங்கை கடுமையாக பாதித்தது. பொள்ளாட்சிக்கு பலரும் வண்டி கட்டி வரத்தொடங்கினர். பிரபுவை காண ஒரே கூட்டம். அதை சமாளித்து படம் எடுப்பதே ராஜ்கபூருக்கு பெரும் சவாலானது. 




இரு வரியில் இளையராஜாவுக்கு சொன்ன கதை!


ஆரம்பித்ததும் தெரியாமல், முடித்ததும் தெரியாமல் சூட்டிங் வேகமாய் முடிந்தது. ‛36 நாள்... 31 ரோல்...’ என்கிற பார்முலாவில் படத்தை முடித்தார் ராஜ்கபூர். பிரபுவிடம் பெற்ற 28 நாள் கால்ஷீட்டில் 6 பாடல்கள், 3 பைட், 60 சீன் என அனைத்தையும் முடித்து குறித்த நேரத்தில் படத்தை நிறைவு செய்தார் ராஜ்கபூர். சூட்டிங் நடந்து கொண்டிருந்த போதே, இளையராஜா டேட் வந்துவிடுகிறது. அவர் படுபிஸி. இதற்கிடையில் அவரை சந்திக்கிறார் ராஜ்கபூர். இசைக்கு முன் கதை கேட்கிறார் ராஜா. இதுவரை யாரிடமும் கதை சொல்லவில்லை; ஆனால் இப்போது சொல்லியே ஆக வேண்டும். ‛ஒரு பொண்ணு குழந்தை பிறக்காதுனு நினைக்கிறா... கடைசியில் அவளுக்கு இரட்டை குழந்தை பிறக்குது...’ இது தான் கதை என ராஜ்கபூர் சொல்ல, மேலும் கீழும் பார்க்கிறார் இளையராஜா. ‛பாடல்களுக்கான சீனையாவது சொல்லு...’ என இளையராஜா கேட்க, அதை சொல்லி முடித்ததும், 30 நிமிடத்தில் கம்போசிங் முடிந்து, சூட்டிங் புறப்பட்டார் ராஜ்கபூர். அவர் படத்தை முடிக்கவும், ராஜா பாடல்களை முடிக்கவும் சரியாக இருந்தது. 




இளையராஜா செய்த சிபாரிசு... !


படம் முடித்து, ரீரெக்கார்டிங் செய்ய வேண்டும். அதற்காக இளையராஜாவுக்கு படம் திரையிடப்படுகிறது. இளையராஜாவை வரவேற்க வெளியில் காத்திருக்கிறார் ராஜ்கபூர். உள்ளே இளையராஜா சென்றதை அவர் கவனிக்கவில்லை. சிறிது நேரம் கடந்து இளையராஜா உதவியாளர் கீழே வந்து விசயத்தை கூற, அடித்துப் பிடித்து ஓடுகிறார் ராஜ்கபூர். ராஜாவுக்கு காக்க வைத்த கோபம்.  படத்தை முழுவதும் பார்த்துவிட்டு வெளியே வருகிறார் இளையராஜா. பிரபுவும், ராம்குமாரும், ‛படம் எப்படி இருக்கு...’ என கேட்கிறார்கள். ‛லேடீஸ்... லேடீஸ்...’ என கூறிவிட்டு புறப்படுகிறார் இளையராஜா. இயக்குனர் ராஜ்கபூரிடம் எதுவும் கூறவில்லை. சிறிது நேரம் கழித்து அதே உதவியாளர் மீண்டும் வருகிறார். ‛யோவ்... ஏவிஎம் உருண்டு பக்கத்துல சார் கார்ல வெயிட் பண்றாரு போ...’ என்கிறார். விழுந்தடித்து மீண்டும் ஓடுகிறார் ராஜ்கபூர். ‛என்னய்யா.... படம் பண்ணிருக்க... சூப்பர்யா...’ என இளையராஜா கூற, ராஜ்கபூருக்கு தலையும் புரியல, காலும் புரியல. ‛காலையில... என்னை வீட்டில வந்து பாரு...’ என கூறி செல்கிறார் இளையராஜா. காலையில் போனால், அவருக்கு முன் ஒருவர் அமர்ந்திருக்கிறார். இந்த வந்துட்டாரு... இவர் தான் டைரக்டர்... அட்வான்ஸ் கொடுங்க..’ என தயாரிப்பாளர் ஏஜிஎஸ்.,யை ராஜ்கபூருக்கு அறிமுகம் செய்து வைக்கிறார் இளையராஜா. ராஜ்கபூருக்கு ஒன்னும் புரியவில்லை. ‛வசந்த்தை வைத்து பண்ணலாம்னு இருந்த படம் ட்ராப் ஆகிடுச்சு.... முரளி-ரேவதி கால்ஷீட் இருக்கு. நான் தான் மியூசிக். நீ தான் இந்த படத்தை பண்ணனும்...’ என இளையராஜா கூற, படம் ரீலீஸ் ஆவதற்கு முன்பே இரண்டாவது வாய்ப்பை வாங்கித் தந்த இளையராஜாவையும், அதற்கான வாய்ப்பு தந்த தாலாட்டு கேட்குதம்மா படத்தையும் ஒரு நிமிடம் நினைத்து உருகி போனார் ராஜ்குமார். தாலாட்டு கேட்குதம்மா ரீலிஸ் ஆவதற்கு முன்பே அதன் இயக்குனருக்கு ‛சின்ன பசங்க நாங்க’ பட வாய்ப்பை வாங்கித் தந்தது.