அதிமுக முன்னாள் அவைத் தலைவரும், அரசவை கவிஞருமான புலவர் புலமைப்பித்தன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 86.
எம்.ஜி.ஆரின் அணுக்கத் தொண்டராக, அன்புக்கு பாத்திரமாக விளங்கிய புலமைப்பித்தன் அதிமுகவின் அவைத் தலைவராக, தமிழ்நாட்டின் அரசவை கவிஞராக பதவி வகித்தவர்.
குடியிருந்த கோயில் திரைப்படத்திற்காக’நான் யார், நீ யார், நாலும் தெரிந்தவர் யார், தாய் யார், மகன் யார், தெரியார்’ என்ற தனது முதல் பாடலை எழுதி கவனம் பெற்றவர். அதன்பிறகு எம்.ஜி.ஆரின் அடிமைப்பெண் படத்தில் ‘ஆயிரம் நிலவே வா’ என்ற பாடல் மூலம் புகழ் பெற்றார். கமல் நடித்த உன்னால் முடியும் தம்பி திரைப்படத்தில் அவர் எழுதிய ‘ புஞ்சை உண்டு, நஞ்சை உண்டு, பொங்கி வரும் கங்கை உண்டு பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லை’ என்ற பாடல் பாட்டாளிகளின் குரலாக ஒலித்தது
உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை 9.33 மணிக்கு உயிர் பிரிந்தது