அஜித் நடிப்பில் ஹெச்.வினோத், இயக்கத்தில் வெளியாக உள்ள திரைப்படம் வலிமை. இந்தப் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி  நடித்து வருகிறார்.  மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  ​இப்படத்தை போனி கபூர் மற்றும் ஜி ஸ்டியோஸ் இணைந்து தயாரித்து வருகின்றனர். அஜித் நடிக்கும் 61-வது படம் இது என்பதால் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வலிமை படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் எடுக்கப்பட்ட நிலையில் , இறுதியாக கார் சேஸிங் மற்றும் சண்டைக்காட்சி ஒன்றிற்காக ரஷ்யா சென்றனர் படக்குழு.


தற்போது அந்த காட்சிகளையும் எடுத்து முடித்து நாடு திரும்பியுள்ளனர். தற்போது படம் போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகளில் உள்ளது. அதுவும் விரைவில் முடிந்துவிடும் என படக்குழுவிற்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர். விரைவில் வலிமை படத்தின் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை வருகிற அக்டோபர் மாதம் திரையிட படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர்.




கடந்த இரண்டு ஆண்டுகளாக வலிமை படத்தின்  அப்டேட் எப்போ வரும் என காத்திருந்த ரசிகர்களுக்கு வலிமை படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர்கள் விருந்தாக அமைந்தது. பல ரசிகர்கள் வந்தவர்கள் போனவர்கள் எல்லோரிடமும் வலிமை படம் குறித்த அப்டேட்டை கேட்க துவங்கிவிட்டனர். இன்னும் சிலரோ கோவில் பூசாரியிடமும்  கூட “வலிமை அப்டேட் கொடுங்க சாமி ” என கேட்ட வீடியோ வைரலானது.


இந்நிலையில் மலேசியாவில் உள்ள “தல அஜித் ஃபேன் கிளப்” அமைப்பை சேர்ந்த  அஜித் ரசிகர்கள் இணைந்து ‘வலிமை’ என்ற பெயர் சானிடைசர் ஸ்ப்ரே ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.அந்த பாட்டிலில் அஜித்தின் வலிமை பட போஸ்டர் இடம்பெற்றுள்ளது.மேலும் வலிமை என ஆங்கிலத்தில் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இது அஜித் மீது ரசிகர்களுக்கு இருக்கும் தீவிர அன்பை வெளிப்படுத்துவதாகவே உள்ளது. இந்த சானிடைசர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.






முன்னதாக  சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலிமை அப்டேட் ஒன்றை கொடுத்திருந்தார். அதாவது வலிமை என்ற புதிய வணிகப்பெயர் கொண்ட சிமெண்ட்டை  வெளிச்சந்தையில் அறிமுகப்படுத்த டான்செம் திட்டம் வகுத்துள்ளது என்றும் இதன் மூலம்  பயனற்ற பழைய சுரங்கம் மற்றும் குவாரிகளை மக்களுக்கு பயன்படும் வகையில் மாற்றித்தரப்படும் என தெரிவித்தார். மேலும், எம் – சாண்ட் தயாரிப்பு தொழிலை முறைப்படுத்தவும் வழிவகை செய்யப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அஜித் படத்தை நோக்கமாக கொண்டு  வலிமை என்ற பெயரில் தமிழக அரசு அறிமுகப்படுத்தவில்லை என்றாலும், அதனையும் ரசிகர்கள் கொண்டாட தவறவில்லை.