இயக்குனர்களுக்கு என்று ஒரு வரலாறு உண்டு. அந்த வரலாற்றிக்கு பல வலிகள் உண்டு. வலிகள் தாண்டாத கலைஞன் இல்லை; கலைஞன் பார்க்காத வலிகளும் இல்லை. பேசப்படும் இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர், நடிகர், எழுத்தாளர், கவிஞர், இப்படி இன்னும் என்னவெல்லாம் அறிவு சார் விசயங்கள் இருக்கிறதோ... அத்தனைக்குள்ளும் தன்னை அடைப்பவர் ஆர்.பார்த்திபன். இயக்குனர் பாக்யராஜின் சிஷ்யர் என அறியப்படுவர். பல சிஷ்யர்களை உருவாக்கியவர். ஆனாலும் பார்த்திபனின் சினிமா பயணம் அவ்வளவு எளிதாக துவங்கிவிடவில்லை. 




நடிகன் இயக்குனராக மாறிய தருணம்!


3ம் வகுப்பு படிக்கும் போது எழுந்த சினிமா ஆசை. நடிகனாக வர வேண்டும் என்கிற வேட்கை. அதற்கு என்னவெல்லாம் செய்தால் இடம் கிடைக்கும் என்கிற ஆர்வம், இவை அனைத்தும் பார்த்திபனை கோடம்பாக்கத்திற்கு அழைத்தது. நடிப்புக்கு நாடகப் பயிற்சி வேண்டும் என நாடக கம்பெனியில் சேர்ந்தது முதல், லட்சியம் தடம் மாறுகிறது என உணர்ந்து கோடம்பாக்கம் வந்தது வரை பார்த்திபனின் புதிய பாதை சுவாரஸ்யமானது. ஒரு வழியாக இயக்குனர் பாக்யராஜிடம் வந்து உதவியாளராக சேர்ந்தாகிவிட்டது. ஆனால் அதற்கு முன், வாய்ப்புகளை தேடி இருவரும் ஒன்றாய் பயணித்தவர்கள். பாக்யராஜ் இயக்குனர் வாய்ப்புக்கு போகும் இடத்தில், நடிப்புக்கு வாய்ப்பு கேட்டு நின்று கொண்டிருந்தவர் பார்த்திபன். ஒரு கட்டத்தில் இயக்கம் தான் நடிப்பை விட சிறந்தது என்று உணர்ந்த பார்த்திபன், அந்த ரூட்டில் பயணிக்க நினைத்து பாக்யராஜிடம் சென்றார். 




ஆயிரம் கனவுகளோடு தாவணி கனவுகள்...!


பாக்யராஜ் தாவணி கனவுகள் படம் எடுக்கும் போது, அதில் உதவி இயக்குனராக பார்த்திபன் சேர்கிறார். அப்போது பாக்யராஜிடம் நிறைய உதவி இயக்குனர்கள் இருக்கிறார்கள். அவர்களோடு ஒப்பிடும் போது பார்த்திபன் கத்து குட்டி. ஆனாலும் பார்த்திபனின் ஆர்வம், ஆர்வ கோளாறு எல்லாமே பாக்யராஜிற்கு பிடித்து விடுகிறது. தாவணி கனவுகளில் பார்த்திபனுக்கு சில காட்சிகள் தந்த பாக்யராஜ், அந்த படம் முடிந்த கையோடு , ‛என்னை வைத்து ஒரு படம் பண்றீயா...’ என பார்த்திபனிடம் கேட்டார். ‛இல்லை சார்... நான் இன்னும் கத்துக்கனும்...’ என அதை மறுத்தவர் பார்த்திபன். அந்த அளவிற்கு நம்பிக்கையை பெற்றார். மூன்று படங்கள்... அதன் பின் மூன்று ஆண்டுகள் என பாக்யராஜ் உடன் இணைந்து பயணம் செய்தவர் பார்த்திபன். ஆனால் அதன் பின் பிரிவு... என்ன நடந்தது அவர்களுக்குள்?


இசையமைப்பாளர் பாக்யராஜ்!


தன் சிஷ்யன் மீதான நம்பிக்கையில் ‛முதல் பாதை’ என்கிற படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்குகிறார் பாக்யராஜ். ஒரு பக்க அளவில் விளம்பரம்... ‛பாரதிராஜாவிடம் இருந்த ஒரு பாக்யராஜ்... பாக்யராஜிடம் இருந்து ஒரு பார்த்திபன்...’ என அந்த விளம்பரத்தை பாக்யராஜ் வெளியிட்டு இன்ட்ஸ்ட்ரியில் பரபரப்பை ஏற்படுத்தினார். முதல் பாதை மீது எதிர்பார்ப்பு எகிறியது. படத்திற்கு பாக்யராஜ் தான் இசை. 80களில் ஒரு இயக்குனரின் அதிகபட்ச ஆசை;தனது முதல் படத்திற்கு இளையராஜா தான் இசையமைக்க வேண்டும் என்பது. பார்த்திபனுக்கும் அது இல்லாமல் இல்லை. பாக்யராஜிடம் கூறுகிறார். அவரது எண்ணம் அவருக்கு புரிந்தது. ‛சரி போ... அவரிடம் கேளு... அவர் ஓகே சொன்னா போடலாம்...’ என்கிறார் பாக்யராஜ். 




காலில் விழுந்த பார்த்திபன்... கெட்அவுட் சொன்ன இளையராஜா!


பாக்யராஜ் ஓகே சொன்னது தான் தாமதம், உடனே இளையராஜாவிடம் புறப்பட்டார் பார்த்திபன். ‛உனக்கென்ன... நீயும் ஒரு ஆர்மோனியம் தூக்க வேண்டியது தானே...’ என எரிச்சலாகிறார் இளையராஜா. பாக்யராஜ் இசையமைப்பாளர் ஆனதில் அவருக்கு இருந்த கோபத்தின் வார்த்தைகள் அவை. காலில் விழுகிறார் பார்த்திபன், ‛உங்க யாருக்கும் மியூசிக் பண்ண முடியாது... கெட் அவுட்...’ என்றார் இளையராஜா. பாக்யராஜ் மட்டுமல்ல பாக்யராஜின் உதவியாளர்களுக்கும் இசையமைக்க கூடாது என்கிற உறுதியில் அப்போது இருந்தார் இளையராஜா. சுவற்றில் அடித்த பந்தாக மீண்டும் பாக்யராஜிடம் வந்தார் பார்த்திபன். அப்புறம் என்ன முதல் பாதை இசையமைப்பாளர் பாக்யராஜ் தான். 


பாக்யராஜிற்கு பார்த்திபன் எழுதிய உயில்!


சூட்டிங் நன்றாக தான் துவங்கி நடந்தது. தயாரிப்பு பணிக்காக பாக்யராஜ் நியமித்த நபர், பார்த்திபனுக்கு தொழில்நுட்ப ரீதியான ஒத்துழைப்பை வழங்கவில்லை. அதனால் அந்த படத்தில் அவர் தொடர விரும்பவில்லை. சம்மந்தப்பட்ட நபர், பாக்யராஜிற்கு நெருக்கமானவர் என்பதால், அவரை பற்றி குறை சொல்லவும் அவர் விரும்பவில்லை. வழக்கமாக மனகசப்பு வரும் போதெல்லாம் பாக்யராஜிற்கு கடிதம் எழுதி விட்டு செல்வது பார்த்திபனின் வழக்கம். ஒரு முறை ‛இனி எனக்கு கடிதம் ஏதாவது எழுதுன அவ்வளவு தான்...’ என பாக்யராஜ் கடிந்திருந்தார். அதனால் அவர், இம்முறை பாக்யராஜிற்கு ‛உயில்’ ஒன்றை அனுப்பிவிட்டு திருப்பதி செல்லும் பஸ்ஸில் ஏறி புறப்பட்டார்.




தாய் மூக்குத்தியை விற்று பாக்யராஜிற்கு வாழ்த்து!


காரணம் தெரியாமல் குழம்பிப் போன பாக்யராஜ், பார்த்திபனை பல இடங்களில் தேடியும் ஆள் கிடைக்காமல் அதிருப்தியானார். முதல் பாதையும் ட்ராப் ஆனது. ஆண்டுகள் கடக்கிறது. பாக்யராஜின் பிறந்தநாள் வருகிறது. அவர் உடன் இருந்த வரை முன்னின்று அதை நடத்துபவர் பார்த்திபன். இந்தமுறையும் இயக்குனர் இடம் இருக்க வேண்டும் என்கிற மனது. ஆனால் எப்படி செல்வது. தனது தாயின் மூக்குத்தியை விற்று அதில் கிடைத்த 1500 ரூபாயில் தினத்தந்தியில் ஒரு விளம்பரம் கொடுக்கிறார் பார்த்திபன். ‛அணில் முணுமுணுக்கிறது என்று தான் பலர் நினைப்பார்கள்... ஆனால் அது எந்நேரமும் ராமா ராமா என்று தான் கூறிக்கொண்டிருக்கும். அது போல் தான் நானும் உங்களை எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பேன்’ என அந்த வாழ்த்து விளம்பரத்தில் பார்த்திபனின் வரிகள் இடம் பெற்றிருந்தது.  


புதிய பாதை... புதிய பாதை காட்டியது!


பார்த்திபனின் விளம்பரத்தை படித்த பாக்யராஜிற்கு ஒரு விதமான நெகிழ்ச்சி. அவரை வரவழைக்க ஆட்களை அனுப்புகிறார். ‛நான் வருகிறேன்... ஆனால் எந்த படத்தையும் என்னை இயக்க கட்டாயப்படுத்தக் கூடாது என்கிற கன்டிஷனோடு மீண்டும் களமிறங்கினார் பார்த்திபன். இந்த முறை இருவரும் இணைபிரியா குரு-சிஷ்யன் ஆகினர். இப்போது ‛புதிய பாதை’ கதையோடு தயாரிப்பாளர் கிடைத்து படத்தை துவக்குகிறார் பார்த்திபன். இப்போதும் இளையராஜாவிடம் போகிறார். அதே கதை தான். இசையமைக்க மறுக்கிறார் இளையராஜா. வேறு வழியில்லை, சந்திரபோஸிடம் தஞ்சம். படத்தின் நாயகி சீதா உடன் காதல், என முதல் படம் செம ஹிட். புதிய பாதை சினிமாவிலும் வாழ்க்கையிலும் பார்த்திபனுக்கு புதிய பாதை காட்டியது. 




பார்த்திபன்-இளையராஜா காதல்!


என்ன தான் புறக்கணித்தாலும் இளையராஜா மீது பார்த்திபனுக்கு இருந்த காதல் குறையவில்லை. பின்னாளில் அவர்கள் இணைந்தார்கள். இசைத்தார்கள். ஏவிஎம் வாய்ப்பு வரும் போது, அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இருந்த லடாய் காரணமாக இசையமைப்பாளரை மாற்றச் சொல்கிறார்கள், அப்போது இளையராஜா இல்லாமல் படம் செய்ய முடியாது என முன்தொகையை திருப்பிக் கொடுத்து வந்தவர் பார்த்திபன். ‛உங்கள் முதல் படத்தில் இளையராஜாவா இசையமைத்தாரா... அது நன்றாக தானே போனது’ என்றவர்களிடம், ‛அவர் இசையமைத்திருந்தால் இன்னும் ஹிட் ஆகியிருக்கும்...’ என்றவர் பார்த்திபன். ‛இரண்டாவது படத்திற்கு அவர் தானே இசையமைத்தார்... அந்த படம் ஓடவில்லையே...’ என்றவர்களிடம், ‛அவர் இசையமைத்ததால் தான் அந்த அளவிற்காவது படம் ஓடியது...’ என்று கடைசி வரை இளையராஜாவை விட்டுக்கொடுக்காதவர் பார்த்திபன்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண