எனக்கு ஒரு நினைவு இருக்கிறது. சின்ன வயதில் ஒருமுறை யதார்த்தமாக டிவியில் சேனல் மாற்றிக்கொண்டிருந்த போது செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் பாடல் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது எனது அம்மா வேகமாக ரிமோட்டை என்னிடம் இருந்து பறித்து அந்தப் பாடலை அத்தனை உற்சாகமாக பார்க்கத் தொடங்கினார்.இ ந்தப் பாட்டில் அப்படி என்ன இருக்கு? என்று அம்மாவிடம் கேட்டபோது அம்மா அந்தப் பாடலைப் பற்றி மிக உற்சாகமாக பேசத் தொடங்கினார்.


கனவு நாயகன் சரத்பாபு:


நமது அம்மா அப்பா காலத்தில் அதாவது 80 களில் என்று வைத்துக்கொள்ளுங்கள் பட்டணத்தில் படித்துவிட்டு கிராமத்திற்கு வரும் ஆண்களின் மேல் பெண்களுக்கு ஒரு தீராக்காதல் இருந்திருக்கிறது.16 வயதினிலே படத்தில் வரும் இளைஞனைப் பார்த்து ஸ்ரீதேவி காதல் கொள்வார், மெல்லத் திறந்தது கதவு படத்தில் மோகனைக் காதலிக்கும் ராதா இப்படியென எல்லாத் திரப்படங்களிலும் நமது தமிழ் நடிகர்களை டம்மியாக்கும் பட்டணத்து மாப்பிள்ளைகள் வந்துகொண்டிருந்த காலம். அந்த காலகட்டத்தில் பெண்களிடம் அதிக ஈர்ப்பைப் பெற்றவர் என்றால் அது சரத்பாபு தான். எப்போதும் படித்தத் திமிரில் கிராமத்திற்கு வரும் இளைஞர்கள் இங்கு இருக்கும் பெண்களிட ஃப்ளர்ட் செய்துவிட்டு ஏமாற்றும் கதாபாத்திரங்களாக தான் இருந்திருக்கிறார்கள்.


செந்தாழம் பூவில்


ஆனால் ஒரு ஜீப் ஓட்டிக்கொண்டு அழகான ஒரு தமிழ் பாடல் பாடிக்கொண்டு வரும் சரத்பாபுவை பெண்கள் ரசிப்பதற்கான காரணம் எனக்குப் புரிந்தது. தனது மிக அடக்கமான நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் சரத்பாபு. முள்ளும் மலரும் படத்தில் ஆரம்பத்தில் ரஜினியை டம்மியாக்குவார் சரத்பாபு. இதனால் ஒரு ரஜினி ரசிகனாக நமக்கு கோபம் கூட வரும். ஆனால் படத்தின் கடைசியில் தனது தங்கை சரத்பாபுவை விட்டு தன் அண்ணன் தான் முக்கியம் என்று வரும்போது, ரஜினி சொல்லும் வசனம் சரத்பாபுவை தமிழ் ரசிகர்கள் வில்லனாக கற்பனை செய்யாமல் ஏற்றுக்கொண்டதற்கு முக்கியமானக் காரணம்.


இன்று 80,90 களில் வாழ்ந்தவர்கள் செந்தாழம்பூவில் பாடலை ரசித்து கேட்பது போலவே இன்றையத் தலைமுறையினரும் இந்தப் பாடலை ரசித்துக் கேட்கிறார்கள்.


கமல்ஹாசன்:


ஒரு சுவாரஸ்யமானத் தகவல் என்னவென்றால் சரத்பாபு நமக்கு பரிச்சயமான இந்தப் பாடல் ஒருவர் இல்லாமல் இருந்திருந்தால் நமக்கு கிடைத்திருக்காமல் இருந்திருக்கும். முள்ளும் மலரும் படத்தில் பட்ஜட் சிக்கல் ஏற்பட்டதால் தயாரிப்பாளர் செந்தாழம் பூவில் பாடல் இல்லாமல் படத்தை வெளியிட திட்டமிட்டார். இது குறித்து  இயக்குனர் மகேந்திரன் உலக நாயகன் கமலஹாசனிடம் தெரிவித்திருக்கிறார். தனது சொந்த செலவில் கமலஹாசன் செந்தாழம் பூவில் பாடலை எடுக்க உதவி செய்துள்ளார். இந்தத் தகவலை பல ஆண்டுகள் கழித்து இயக்குனர் மகேந்திரன் பகிர்ந்துகொண்டார்.


 


இன்று சரத்பாபுவை ஒரு பாடலை வைத்து நாம் நினைவுக் கூறுகிறோம் ஆனால் அந்த ஒரு பாடல் வரலாற்றில் இல்லாமல் போவதற்கான அத்தனை வாய்ப்புகளும் இருந்தன.செந்தாழம் பூவில் பாடல் உருவாகியதற்கு காரணம் யார் தெரியுமா.


மேலும் படிக்க....


Sarath Babu Death: பெரும் சோகம்.. பிரபல நடிகர் சரத்பாபு உயிரிழப்பு..! கண்ணீரில் ரசிகர்கள்..!