தஞ்சாவூர்: தஞ்சாவூரில் மது அருந்தி 2 பேர் இறந்த விவகாரத்தில் 5 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சயனைட் கிடைத்தது எப்படி? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
2 பேர் உயிரிழப்பு:
தஞ்சாவூர், வெள்ளைப்பிள்ளையார் கோவில் அருகே அரசு டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இக்கடையின் அருகே பார் செயல்பட்டு வருகிறது. இந்த பாரில் நேற்று காலை 11 மணிக்கு, தஞ்சாவூர் கீழவாசல் படைவெட்டி அம்மன்கோவில் தெருவை சேர்ந்த மீன் வியாபாரியான குப்புசாமி (68) பூமால் ராவுத்தன் கோவில் தெருவை சேர்ந்த கார் டிரைவரான விவேக் (36) ஆகியோர் மது அருந்தினர். தொடர்ந்து இருவரும் வாயில் நுரைதள்ளிய நிலையில் மயங்கி விழுந்து இறந்தனர்.
இவ்விவகாரம் குறித்து கீழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, பார் உரிமையாளரும், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் துணைத் தலைவர் பழனிவேல், பார் ஊழியர் காமராஜ் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சயனைட் கலந்து உயிரிழப்பு:
மேலும், பாருக்கு ஆர்டிஓ (பொ) பழனிவேல், கலால் தாசில்தார் தங்க பிரபாகரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா உள்ளிட்டோர் முன்னிலையில், நேற்று இரவு சீல் வைக்கப்பட்டது.
இதற்கிடையில், இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில், அவர்களின் உடலின் சயனைட் கலந்து இருப்பதாக, தகவல் வெளியானது. இதனால், அவர்கள் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், போலீஸ் எஸ்.பி., ஆஷிஷ் ராவத் நிருபர்களிடம் கூறியதாவது, இருவரது உடல்களிலும் இருந்த வயிற்றுப் பகுதி, கல்லீரல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளில் இருந்து மாதிரி எடுக்கப்பட்டு, தஞ்சாவூர் மண்டல தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன. அதில், சயனைட் கலந்து இருப்பது தெரியவந்துள்ளது.
தற்கொலையா? கொலையா?
உயிரிழந்த விவேக்குக்கு குடும்ப பிரச்னை காரணமாக அவர் மனைவியை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இருவரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்த விசாரணையும் நடப்பதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், இறந்த குப்புசாமி, விவேக் ஆகியோரின் உறவினர்கள், இறந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என 2வது நாளாக உடலை வாங்க மறுத்துள்ளனர்.
தனிப்படை:
மேலும், சயனைட் சாப்பிட்டு இறக்கும் அளவிற்கு இருவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. சயனைட் எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும். போலீசார் சயனைட் என கூறி, இருவரின் மரணத்தையும் திசை திருப்ப பார்ப்பதற்காக உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதற்கிடையில் போலீஸ் தரப்பில் இருவரின் மரணத்தை விசாரிப்பதற்காக ஏ.டி.எஸ்.பி., ஜெயசந்திரன், முத்தமிழ்ச் செல்வன் ஆகியோர் தலைமையில், பட்டுக்கோட்டை டி.எஸ்.பி., பிரித்விராஜ் சவுகான், திருவிடைமருதுார் டி.எஸ்.பி., ஜாபர் சித்திக், திருவாரூர் டி.எஸ்.பி., பிரபு, பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., ராஜ்குமார், தஞ்சாவூர் டவுன் டி.எஸ்.பி., ராஜா ஆகியோர் மேற்பார்வையில் 5 தனிப்படை போலீசார் சயனைட் எப்படி வந்தது. விவேக் மற்றும் குப்புசாமி குடும்ப பின்னணி என்ன? வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சயனைட் எப்படி வந்தது. யார் வாங்கி வந்தார்கள் என்பது குறித்து முடிவு கிடைத்தால் தான். இருவர் மரணத்தில் உள்ள மர்மம் விலகும் என்பதால் போலீஸ் தரப்பில் குழப்பத்தில் உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.