இரண்டு ஃபிலிம் ஃபேர் விருதுகள் வாங்கிய மகிழ்ச்சியில் சாய்பல்லவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
ஃபிலிம் பேர் விருதுகள் வழங்கும் விழா கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி பெங்களூரில் நடந்து முடிந்தது. இந்த விருதுகள் வழங்கும் விழாவில் லவ் ஸ்டோரி படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த நடிகைக்கான விருதும், ஷ்யாம் சிங்க ராய் படத்தில் சிறந்த நடிப்பை கொடுத்ததற்காக சிறந்த நடிகைக்கான கிரிட்டிக்ஸ் விருதும் சாய் பல்லவிக்கு வழங்கப்பட்டது.
அது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் அவர், “ இந்த நாட்கள் அடிக்கடி வருவதில்லை. இந்த வருடத்தில் வெளியான இரண்டு படங்களும் பாராட்டப்பட்டு இருக்கின்றன. நிச்சயம் இது எனக்கு மிகவும் சிறப்பான தருணம். இந்த இரண்டு படங்களில் நான் ஏற்றுக்கொண்டு இரண்டு கதாபாத்திரங்களுக்கு கிடைத்த வரவேற்பிற்கு நன்றியுடையவளாக இருக்கிறேன். மேலும் இது போன்ற அழகான கதாபாத்திரங்களை பெற நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் என்று பதிவிட்டு படக்குழுவினருக்கு நன்றியை தெரிவித்து உள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் மிக முக்கியமான நடிகையாக வலம் வருபவர் நடிகை சாய்பல்லவி. தாம் தூம் படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடிகையாக அறிமுகமான சாய் பல்லவிக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படம் பெரிய பிரேக்காக அமைந்தது. தொடர்ந்து களி, மாரி 2, லவ் ஸ்டோரி, கார்கி உள்ளிட்ட பல படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிகையாக கமிட் ஆகியிருக்கிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் சாய்பல்லவி அவ்வப்போது தனது குடும்பத்தினருடன் இருக்கும் வீடியோவை பதிவிட்டு இருந்தார்.