மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹார் வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி வருகிறது. 'Main RahoonYa Na Rahoon, Yeh Desh Rehna Chahiye- Atal' என்ற பெயரில் உருவாகி வரும் இந்தத் திரைப்படத்திற்காக இயக்குநர் சந்தீப் சிங், தயாரிப்பாளர் வினோத் பனுஷாலி ஆகியோர் இணைந்துள்ளனர். 


மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹார் வாஜ்பாயின் புத்தகத்தின் பிரபல வரிகளான 'Main RahoonYa Na Rahoon, Yeh Desh Rehna Chahiye.' என்பதன் அடிப்படையில் இந்தத் தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும், பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா வெளியிட்டு, எழுத்தாளர் உல்லேக் என்.பி எழுதிய "The Untold Vajpayee: politician and paradox" புத்தகத்தின் தழுவலாகவும் இந்தத் திரைப்படம் உருவாகி வருகிறது. 



தயாரிப்பாளரும், திரைப்பட இயக்குநருமான சந்தீப் சிங் தலைமையில் உருவாகி வரும் இந்தத் திரைப்படம் வரும் 2023ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது, மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 99வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வெளியிடப்படுகிறது. 






இந்தப் படத்தின் தலைப்பையும், அதன் போஸ்டரையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் படத்தின் இயக்குநர் சந்தீப் சிங். அந்தப் பதிவில், `அடல் பிஹார் வாஜ்பாய்ஜி இந்திய வரலாற்றில் தலைசிறந்த தலைவர்களுள் ஒருவர். தன் சொற்களால் எதிரிகளின் மனங்களை வென்றவர்; தேசத்தை முன்னேற்றப் பாதையில் வழிநடத்தியதோடு, முன்னேறிய இந்தியாவுக்கான ப்ளுப்ரிண்டை உருவாக்கியவர். ஒரு திரைப்பட இயக்குநராக, சொல்லப்படாத கதைகளை சொல்வதற்கான சிறந்த கருவி சினிமா எனக் கருதுகிறேன். வாஜ்பாயின் அரசியல் கருத்தியல் மட்டுமின்றி, அவரது மனிதாபிமானம், கவித்துவ வாழ்க்கை முதலானவை எப்படி அவரை இந்தியாவின் மிக விரும்பத்தக்க எதிர்க்கட்சித் தலைவராகவும், மிகவும் முற்போக்கான பிரதமராகவும் மாற்றியது என்பதைக் குறித்து பேசவுள்ளோம். 


`அடல்’ திரைப்படத்தை பனுஷாலி ஸ்டூடியோஸ், லெஜண்ட் ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் வினோத் பனுஷாலி, சந்தீப் சிங், சாம் கான், கம்லேஷ் பனுஷாலி, விஷால் குர்னானி முதலானோர் தயாரிக்கின்றனர்.