Tamil Film Awards: தமிழ்நாடு அரசு வழங்கும் திரைப்படவிருதுகள், திரைப்படமானியம் மற்றும் சின்னத்திரை விருதுகளுக்கான விண்ணப்பங்கள் பெறுவதற்கு கால அவகாசம் வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு திரைப்பட விருதுகள்:
திரைப்பட விருதுகள் தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் சார்பில் 2019ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை திரைப்படவிருதுகள், 2018ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட தரமான தமிழ்த் திரைப்படங்களுக்கு அரசு மானியம் மற்றும் 2015ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை சின்னத்திரை விருதுகள் வழங்குவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி முதல் கடந்த 8ம் தேதி மாலை 5 மணி வரை பெறப்படும் என ஏற்கனவே நாளிதழ்களில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த காலக்கெடுவை நீட்டித்து வழங்க வேண்டும் என்கிற திரையுலகத்தினரின் கோரிக்கையினை அரசு கனிவுடன் பரிசீலனை செய்து விண்ணப்பங்கள் பெறப்படும் நாளினை வரும் 31ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டித்துள்ளது.
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், உறுப்பினர்-செயலாளர், திரைப்படத் துறையினர் நலவாரியம், முதல் தளம், மாநில செய்தி நிலையம், கலைவாணர் அரங்க வளாகம், சென்னை-600 002. என்ற முகவரியில் வரும் 31ம் தேதி மாலை 5 மணி வரை (அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து) பெறப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருது பிரிவுகள்:
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த திரைப்படங்கள், சிறந்த நெடுந்தொடர்களின் தயாரிப்பாளர்கள், திரைப்படம் மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள், தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்கள் தயாரித்த குறும்படங்களின் தொழில்நுட்பக் கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
பரிசு விவரங்கள்:
கடந்த ஆண்டு நடைபெற்ற திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் 2009 முதல் 2014 ஆம் ஆண்டுகள் வரை தேர்வு செய்யப்பட்ட சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசு ரூ.2 லட்சமும், இரண்டாம் பரிசு ரூபாய் 1 லட்சமும், மூன்றாம் பரிசு ரூ.75 ஆயிரமும், சிறந்த படத்திற்கான சிறப்புப் பரிசு ரூ.75 ஆயிரமும் வழங்கப்பட்டது. மொத்தமாக 23 தயாரிப்பாளர்களுக்கு 26 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையும், சிறந்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர் என 160 பேருக்குத் தலா 5 பவுன் தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது.
சின்னத்திரை பிரிவில் 2009 ஆண்டு முதல் 2013 ஆண்டுகள் வரையிலான சிறந்த நெடுந்தொடர்களின் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசு ரூ.2 லட்சமும், இரண்டாம் பரிசு ரூ.1 லட்சமும் மற்றும் ஆண்டின் சிறந்த வாழ்நாள் சாதனையாளர்களுக்குத் தலா ரூ. 1 லட்சமும் என 20 பேருக்கு ரூ. 25 லட்சத்திற்கான காசோலையும், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என 81 பேருக்கு 3 பவுன் தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் 2008 –2009 ஆம் கல்வியாண்டு முதல் 2013–2014 ஆம் கல்வியாண்டு வரை பயின்ற மாணவர்கள் தயாரித்த சிறந்த குறும்படங்களில் பணியாற்றிய சிறந்த இயக்குநர்கள், சிறந்த ஒளிப்பதிவாளர்கள், சிறந்த ஒலிப்பதிவாளர்கள்,சிறந்த படத்தொகுப்பாளர்கள் என 30 பேருக்குத் தலா ரூ. 5 ஆயிரம் வீதம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையும், 1 பவுன் தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தகக்து.