தமிழ்நாடு தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தாரம் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக சண்முகசுந்தரம் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசிடமும் முதலமைச்சரிடமும் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 


தனிப்பட்ட காரணங்களுக்காக பதவிவிலகுவதாகவும், அரசு பொறுப்பில் இருந்து விலகி தனியாக வழக்கறிஞர் தொழிலை தொடர உள்ளதாகவும் அரசிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் புதிய ஏ.ஜி. நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


யார் இந்த ஆர். சண்முகசுந்தரம்?


திமுக ஆட்சி அமைந்ததும், தலைமை செயலாளர் முதல் பல்வேறு அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டனர்.  அப்போது, ஆர். சணுமுகசுந்தரம் தலைமை வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டார்.  தந்தை ராஜகோபாலை போலவே இவரும் சட்டத்தை நோக்கி பயணம் மேற்கொண்டார். அப்படி வழக்கறிஞராக இருந்த  அவரது வாழ்க்கை பல்வேறு போராட்டங்கள் நிறைந்ததாகவே இருந்தது.


1995 ஆம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் தீவிரமாக இருந்தார். டான்சி நிலத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாங்கிது தொடர்பான வழக்கில் ஆவணத்தை தயார் செய்து கொண்டிருந்த போது ரவுடி கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டார்.  


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஜெயின் கமிஷனுக்கு உதவ தமிழ்நாடு அரசு சார்பில் நியமிக்கப்பட்டவர் இவர். மனித உரிமை மீரல் தொடர்பான வழக்குகளில் உயர்நீதிமன்றம் மட்டுமல்லாமல் உச்சநீதிமன்றத்திலும் இவரது குரல் ஓங்கி ஒலித்தது.


1989 முதல் 1991 வரையிலான திமுக ஆட்சி காலத்தில்  கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராகவும், 1996 முதல் 2001 ஆம் ஆண்டு வரை மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞராகவும் பதவிவகித்தவர் இவர். மேலும், 2000ஆம் ஆண்டில் மூத்த வழக்கறிஞராக சென்னை உயர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார்.


அதன் பின், 2002 முதல் 2008 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். 2015 ஆம் ஆண்டு முதல் 2017  ஆம் ஆண்டு வரை  மெட்ராஸ் பார் அசோசியேசன் தலைவராக இருந்தவர் சண்முகசுந்தரம்.


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது அமைச்சர்களுக்கு எதிராக சொத்து குவிப்பு, ஊழல் மற்றும் குற்ற வழக்குகளை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன் 2021 ஆம் ஆண்டு மே மாதம் அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.


கடந்த 2022 ஆம் ஆண்டு ராஜினாமா முடிவை தமிழக முதல்வரிடம் கொடுத்தபோது, தற்போதய சூழலில் ராஜினாமா செய்ய வேண்டாம் என்று முதல்வர் கேட்டுக்கொண்டதால், தலைமை வழக்கறிஞராக  பணியாற்றிவந்தார். ஆனால் தற்போது மீண்டும் தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். நேற்று இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சரிடம் தகவல் தெரிவித்த நிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக ராஜினாமா கடிதம் ஒப்படைப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.