பூடானில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையை பெற்று வெற்றிபெற்றுள்ளது. முன்னாள் பிரதமர் ஷேரிங் டோப்கேயின் கட்சி நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு மடங்கு இடங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள பதினேழு இடங்களில் பூடான் ட்ரெண்ட்ரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
பூடானில் 47 தேசிய சட்டமன்ற தொகுதிகளில் 30 இடங்களில் மக்கள் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. பூடான் ட்ரெண்ட்ரல் கட்சி 17 இடங்களில் வெற்றி பெற்றது. இதன்மூலம், டோப்கே இரண்டாவது முரையாக பூடானின் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
பூடான் தேர்தல்:
பூடான் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை (ஜனவரி 9ம் தேதி) முதல் தொடங்கியது. சுமார் 8 லட்சம் மக்கள் தொகை கொண்ட நாட்டில் அரசியல் தலைவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி பூடான் நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியை மீட்பார்கள் என மக்கள் நம்புகின்றனர். தேர்தலில் 47 எம்.பி.க்கள் கொண்டு அடுத்த அரசாங்கம் ஆட்சி அமைக்கிறது.
4வது நாடாளுமன்ற தேர்தல்:
தெற்கு ஆசியாவின் மிகச்சிறிய நாடாக இருக்கும் பூடானில் கடந்த 2008ம் ஆண்டு மன்னராட்சி முடிவுக்கு வந்தது. அதன்பிறகு தற்போது 4வது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று, ஜனநாயக ஆட்சி அமைகிறது. முன்னாள் பிரதமர் ஷேரிங் டோப்கேவின் மக்கள் ஜனநாயகக் கட்சியும், முன்னாள் அரசு ஊழியர் பெமா செவாங் தலைமையிலான பூடான் ட்ரெண்ட்ரல் கட்சியும் மட்டுமே தேர்தலில் மோதியது. கடந்த நவம்பரில் நடைபெற்ற முதன்மை சுற்று வாக்கெடுப்பில் ஆளும் ட்ருக் நியாம்ரூப் ஷோக்பா உள்பட மற்ற மூன்று கட்சிகள் இறுதிச் சுற்று வாக்கெடுப்பில் இருந்து வெளியேற்றப்பட்டன.
கடுமையான பொருளாதார நெருக்கடி:
பூடான் நாட்டில் தற்போது பொருளாதார நெருக்கடி முக்கிய பிரச்சனையாக இருந்து வருகிறது. உலக வங்கியின் கூற்றுப்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் பூடானின் வளர்ச்சி விகிதம் 1.7 சதவீதமாக மட்டுமே உள்ளது. வேலையில்லாத் திண்டாட்டத்தால், உயர்கல்வி மற்றும் வேலை தேடி இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு இடம் பெயர்வது நாட்டின் பொருளாதாரத் திறனை பலவீனப்படுத்துகிறது.
பிரதமர் மோடி வாழ்த்து:
பூடான் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ஷெரிங் டோப்கே மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “ என் நண்பர் ஷேரிங் டோப்கேக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். மக்கள் ஜனநாயகக் கட்சி பூடான் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது. நட்பு மற்றும் ஒத்துழைப்பின் தனித்துவமான உறவுகளை மேலும் வலுப்படுத்த மீண்டும் இணைந்து பணியாற்ற எதிர்நோக்குகிறோம்.” என பதிவிட்டுள்ளார்.