நடிகர் அஜித்தில் ரசிகர்களால் தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக சண்டைப் பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். சமீபத்தில் அவர்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லையே...? புகாருக்கு என்ன காரணம் என ‛பேக் பைலை’ புரட்டினால் ஒரே அதிர்ச்சி, அது 11 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தின் விட்ட குறை, தொட்டக்குறை.
நடிகர் அஜித் நிஜத்தில் செய்த பல சம்பவங்களில் மிக முக்கியமானது, 2010ல் அன்றை முதல்வர் கருணாநிதிக்கு திரையுலகம் நடத்திய பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா என்கிற நிகழ்ச்சியில் பங்கேற்ற அஜித், நிகழ்ச்சியில் பங்கேற்க தன்னை கட்டாயப்படுத்தியதாகவும், மிரட்டியதாகவும், எங்கள் தொழிலை செய்ய விடுங்கள்...’ என்று முதல்வர் கருணாநிதி முன்பு தில்லாக பேசினார். அஜித்தின் அந்த பேச்சை, விழாவில் பங்கேற்ற அனைவரும் பாராட்டினர். குறிப்பாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எழுந்து நின்று அஜித்தின் பேச்சுக்கு கைதட்டி ஆதரவு அளித்தார்.
இந்த சம்பவத்தை நாடே அறியும். இந்த சம்பவத்தின் தொடர்ச்சி தான், தற்போது வரை நீட்சியாக நடந்து கொண்டிருப்பதாக ஜாக்குவார் தங்கம் தரப்பின் புகாரின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. அஜித் மேடையில் பேசிய பின், அது தொடர்பாக அன்றைய தினம் கருத்து தெரிவித்திருந்த பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், ‛‛எங்கிருந்தோ பிழைக்க வந்த அஜித் போன்றவர்கள், மனம் போன போக்கில் பேசக்கூடாது. அவரது பேச்சுக்கு அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்,’’ என்று பேட்டியளித்தார். இது அன்றைய தினம் அஜித் ரசிகர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
11 ஆண்டுகளுக்கு முன் ஒட்டப்பட்ட போஸ்டர்:
2010 பிப்ரவரி 17 அன்று இரவு, சென்னை கே.கே.நகரில் உள்ள ஜாக்குவார் தங்கத்தின் வீட்டில் திரண்ட அஜித் ரசிகர்கள், அவரது காரை அடித்து நொறுக்கினர். அந்த நேரத்தில் ஜாக்குவார் தங்கம் வீட்டில் இல்லாததால், அவர் தப்பித்தார். அதன் பிறகு பேட்டியளித்த ஜாக்குவார் தங்கம், ‛அஜித் பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது... அவரை யார் மிரட்டினார்கள் என்று வெளிப்படையாக பேச வேண்டும்,’ என்றெல்லாம் அடுத்தடுத்த பேட்டிகளில் கூறினார். இதனால் அஜித் ரசிகர்களால் அவர் பல்வேறு மிரட்டல்களை சந்தித்தார். அதன் பின் 2011ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது, ஜெயலிதா முதல்வரானார். அரசியல், சினிமா எல்லாமே மாறியது.
11 ஆண்டுகளுக்கு முன் ஒட்டப்பட்ட போஸ்டர்:
இந்த நிலையில் தான் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஜாக்குவார் தங்கம் தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக புகார் அளித்துள்ளார். அந்த மனுவில், ‛தான் 1600 படங்களுக்கு மேல் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியிருப்பதாகவும், தனக்கு மொபைல் போனில் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதாகவும், சமூக வலைதளங்களில் தன்னைப்பற்றி அவதூறு பரபரப்புகின்றனர் என்றும், நடிகர் அஜித்திற்கும் எனக்கும் தகராறு இருப்பது போல பொய்யான தகவல் பரபரப்பப்படுவதாகவும் கூறியுள்ள ஜாக்குவார் தங்கம், அஜித் ரசிகர்களை எனக்கு எதிராக தூண்டிவிடுபவர்கள் மீதும், கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு,’ அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.
11 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்திற்கு, இன்றும் அஜித் ரசிகர்களிடம் மிரட்டல் வருகிறது என்று சண்டைப்பயிற்சியார் புகார் செய்திருப்பது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.