ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த லாலாப்பேட்டை கிராமத்தில் வசித்து வருபவர் செல்வகுமார். இவர் ராணிப்பேட்டை நகராட்சியின் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் செல்வகுமார் வீட்டில் சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த லஞ்ச ஒழிப்பு துறையினர், திருவண்ணாமலை மாவட்ட DSP மதியழகன் தலைமையில் திடீரென நேற்று சோதனைநடத்தினர். சுமார் 15 மணி நேரத்திற்கும் மேலாக நடத்திய சோதனையில் கட்டுக்கட்டுக்காக கணக்கில் வராத பணம், தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் நிலஆவணங்களை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.




தற்போது ராணிப்பேட்டை நகராட்சியில் பொறியாளராக பணியாற்றி வரும் செல்வகுமார் என்பவர் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வரை வேலூர் மாநகராட்சியில் உதவி பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது உதவிபொறியாளரான செல்வகுமார் மீது தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கு தற்போது வரை நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டை கிராமத்தில் உள்ள பொறியாளர் செல்வகுமார் பல்வேறு வகைகளில் லஞ்சம் பெறுவதாகவும், இதன் மூலம் கிடைக்கும் பணத்தை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாகவும் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து நகராட்சி பொறியாளர் செல்வகுமார் வீட்டில் சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த லஞ்ச ஒழிப்பு துறையின் DSP மதியழகன் தலைமையிலான 8 பேர் கொண்ட குழுவினர் திடீரென அதிரடியாக காலை 7 மணிக்கு செல்வகுமார் வீட்டில் நுழைந்து தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வந்தனர். 




காலை தொடங்கிய சோதனை தொடர்ந்து இரவு வரை என சுமார் 15 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. 15 மணி நேரத்துக்கு மேலாக நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் செல்வகுமார் வீட்டிலிருந்து உரிய ஆவணங்கள் இன்றியும் கணக்கில் வராத 10,73,520 ரூபாய் வரைவோலையாகவும், 23 லட்சத்தி 32 ஆயிரத்தி 770 ரூபாய் ரொக்கமாகவும், 193.75 சவரன் தங்கநகைகள், 2.17 கிலோ வெள்ளி மற்றும் பல கோடி மதிப்பிலான நில சொத்து ஆவணங்கள் இருப்பதை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைப்பற்றினர் இதற்க்கு உரிய ஆவணங்களை பொறியாளர் செல்வகுமார் காண்பிக்காததால் அவை பறிமுதல் செய்யப்பட்டு எடுத்து செல்லப்பட்டது. மேலும் பொறியாளர் செல்வகுமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


நகராட்சி பொறியிளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையின் திடீர் சோதனையில் கணக்கில் வராத பணம் கட்டுக்கட்டாகவும், தங்க, வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.