நிலவில் க்யூப் வடிவில் மர்மப் பொருள் ஒன்றை சீனாவின் ஆராய்ச்சி ரோவர் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் சீனாவின் யுடு-2 (Yutu-2) ரோவர் நிலவில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ரோவர் அண்மையில் அனுப்பிய புகைப்படங்களில் நிலவின் வடபகுதியில் ஒரு கன சதுர வடிவ (கியூப் வடிவ) மர்ம பொருள் இருப்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக சீன விண்வெளி திட்டங்கள் பற்றி செய்தி எழுதும் பத்திரிகையாளர் ஆண்ட்ரூ ஜோன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருக்கிரார்.
அவர் பதிவுள்ள முதல் ட்வீட்டில், யுடு-2 ஒரு கன சதுர வடிவ பொருளை புகைப்படம் எழுத்துள்ளது. இது நிலவில் வட பகுதியில் வோன் கர்மான் க்ரேட்டரில் இருந்து 80 மீட்டர் தொலைவில் கிடக்கிறது எனப் பதிவிட்டிருந்தார்.
இந்த ட்வீட் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியாளர்களை பரபரப்பக்க வைத்தது. இதனையடுத்து ஆண்ட்ரூ ஜோன்ஸ் அடுத்தடுத்த ட்வீட்களைப் பதிவு செய்தார்.
அதில் அவர், கொஞ்சம் மங்கலாகத் தெரியும் அந்தப் பொருள் ஏதோ கல் தூணோ அல்லது வேற்றுகிரகவாசியோ இல்லை. ஆனாலும் அது என்னவென்று நிச்சயமாக ஆராய வேண்டும். இப்போது கிடைத்துள்ள புகைப்படத்தைக் கொண்டு அது என்னவென்பதை தெளிவாக அறிய முடியவில்லை. 8 ஆண்டுகளுக்கு முன்னதாக, டிசம்பர் 1 ஆம் தேதி சேங் இ- 3 மிஷன் விண்களம் எடுத்த புகைப்படத்தில் மிகப்பெரிய கற்பாறைகள் கண்டறியப்பட்டன என்று பதிவிட்டுள்ளார்.
இப்போது யுடு-2 Yutu-2 ரோவர் அந்தப் பொருளில் இருந்து 80 மீட்டர் தொலைவில் உள்ளது. அது இன்னும் நெருங்கிச் செல்லும்போது மர்மப் பொருள் என்னவென்று தென்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுடு-2 வின் சுவாரஸ்ய கண்டுபிடிப்பு:
யுடு-2 வின் சுவாரஸ்ய கண்டுபிடிப்பு இது முதன்முறையல்ல. ஏற்கெனவே கடந்த 2019 ஆம் ஆண்டு யுடு-2 ரோவர் ஜெல் போன்ற ஒரு பொருலைக் கண்டறிந்தது. ஆராய்ச்சியில் அதுவும் ஒருவகை பாறை என்பது உறுதியானது. யுடு-2 2019ல் சேங்-இ 4 லேண்டர் மூலம் நிலவில் தரையிறங்கியது. அன்றிலிருந்து இதுவரை இந்த ரோவர் 37 நிலவு தினப் பணிகளை முடித்துள்ளது.
நிலவு நாள் என்றால் என்ன?
புவி தனது அச்சில் சுழல்வதோடு தோராயமாக 365 முறை கதிரவனையும் சுற்றி வருகின்றது. அதேபோல் நிலவு தனது அச்சில் சுழல்கிறது. நிலவு பூமியை ஒருமுறை முழுவதுமாக சுற்றிவிட்டு மீண்டும் அதன் இடத்திற்கே செல்ல 27 நாட்கள் 7 மணி நேரம் 43 நிமிடங்கள் 12 நொடிகள் ஆகின்றன. இதனைத் தான் நிலவு தினம் (Lunar Day) என்று குறிப்பிடுகின்றனர். அந்த வகையில் யுடு-2 ரோவர் 37 நிலவு தினங்களை முடித்துள்ளது.
இப்போது யுடு-2 ரோவர் எடுத்துள்ள புகைப்படத்தில் தெரியும் மர்மப் பொருள் என்னவென்பது இன்னும் சில நாட்களில் நிச்சயம் என்னவென்று தெரிய வரும்.