1990 ஆம் ஆண்டின் பிற்பகுதி மற்றும் 2000-வது ஆண்டின் தொடக்க காலத்தில் மாபெரும் இசைக்கலைஞராக திகழ்ந்தவர் இசையமைப்பாளர் வித்யாசாகர். தமிழ் மட்டுமல்லாது  மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் பணியாற்றியவர். தென்னக பிலிம்பேர் விருது, கேரள மாநில திரைப்பட விருது, சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் மேற்கத்திய இசைய அறிந்த மாஸ்டர் தன்ராஜிடம் மேற்கத்திய இசையைப் பயின்றவர்.  ஜெய்ஹிந்த் , முறை மாமன், எதிரும் புதிரும் , பூவெல்லாம் உன் வாசம் , தவசி , அன்பே சிவம்,  பேராண்மை, சந்திரமுகி என பல படங்களுக்கு இசையமைத்திருக்கும் வித்யாசாகரின் படைப்புகளுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவர் இசையமைத்த பல படங்களில் அனைத்து பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியிருக்கிறது.







ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு இசையமைப்பாளர்களுக்கும் ஏதாவது ஒரு இயக்குநருடன் கூட்டணி அமைக்கும் பொழுது , அந்த பாடலும் சரி , படமும் சரி சூப்பர் ஹிட் ஆகிவிடும். அப்படித்தான் வித்யாசாகர் - தரணி கூட்டணி பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. இருவருக்குமான நட்பு மற்றும் சண்டை  குறித்து நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.


அதில் "என்னுடைய நலனிலும் , வாழ்விலும்  என் மீது எனக்கு இருக்கும் அக்கறையை விட அதிக அக்கறை கொண்டவர் நண்பர் தரணி. தரணிதான் சினிமாவின் முகத்தை மாற்றியவர். கமெர்ஷியலாக படம் எடுக்கக்கூடியவர். உங்களுக்கு கமர்ஷியலாக ஒரு ஹிட் கொடுக்க வேண்டுமா , தரணிதான் தேவை. அதே போல பிளாக் பஸ்டர் ஹிட் கொடுக்க வேண்டுமா அதற்கும் தரணிதான் தேவை. அவருக்கு பாடல்கள் ஸ்லோவா இருந்தா பிடிக்காது. தில் படத்திற்கான பாடல் அனைத்தையும் முடித்து கொடுத்துவிட்டேன்.அப்போது சிடிதான் கொடுத்த பிறகு, அதனை வாங்கி வைத்துக்கொண்டு , தனியாக அறைக்கு வந்து உன் சமையல் அறைனு ஒரு பாட்டு இருக்குல்ல அண்ணா அதை மாத்திடலாமா அப்படினு கேட்டாரு. மெலடி அவருக்கு பிடிக்காது. ரொம்ப அன்பான மனிதர். எனக்காக அந்த மனிதர் நிறைய பேரிடம்.....என்னென்னவோ பண்ணியிருக்காரு அந்த மனுஷன். அந்த நேரத்துல ஒரு காஃபி சாப்பிடும் சமயத்திலேயே பாடலை உருவாக்கிடுவோம் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்தா. நாங்க வித்தியாசமா பண்ணுவோம் . தூள் கிளைமேக்ஸ்ல பாட்டு வரனும் அப்படினு இரண்டு பேரும் சேர்ந்துதான் முடிவு பண்ணிணோம். ஸ்டீரியோ மிக்ஸ் பண்ணும் பொழுது அந்த பாட்டு இல்லை. நான் அந்த பாட்டு எங்க அப்படினு தரணிக்கிட்ட கேட்டேன் . இல்லணா ஃபைட்ல பாட்டு வேண்டாம்னு சொன்னாங்க அதனால அன்னைக்கு பெரிய சண்டை. யாரும் அப்படியெல்லாம் திட்டியிருக்க மாட்டாங்க. அப்படி திட்டிட்டேன். ரீ-ரெக்கார்டிங் பண்ணமாட்டேன்னு சொல்லிட்டேன்.  அதன் பிறகுதான் அந்த பாட்டை ஷூட் பண்ணாரு " என்றார் வித்யாசாகர்.