மலையாள சூப்பர் ஸ்டார்கள் தொடங்கி பாலிவுட் நடிகர்கள் வரை ஃபிஃபா உலகக்கோப்பையை நேரில் சென்று கண்டுகளித்த இந்தியப் பிரபலங்களின் புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
மிகச்சிறந்த இறுதிப்போட்டிகளுள் ஒன்று!
நேற்றைய இரவு உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி ஏற்படுத்திய அதிர்வு இன்னும் அடங்கியபாடில்லை. உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் நிகழ்ந்த மிகச்சிறந்த இறுதிப்போட்டிகளுள் ஒன்றை நேற்று ஒட்டுமொத்த உலகமும் கண்டுகளித்து மெய்சிலிர்த்தது.
கத்தாரில் கடந்த நவம்பர் மாதம் 20ஆம் தேதி தொடங்கிய 22வது கால்பந்து உலகக்கோப்பை திருவிழா நேற்று கோலாகலமான கொண்டாட்டத்துடன் நிறைவு பெற்றது. இதில் நடப்புச் சாம்பியனாக இருந்த பலம்வாய்ந்த பிரான்ஸ் அணியை அர்ஜெண்டினா அணி பெனால்டி ஷூட் அவுட்டில் 4 - 2 என்ற கணக்கில் வென்றது.
அதற்கு முன்னதாக போட்டியின் முழு நேரம் முடிவடையும்போது இரு அணிகளும் 2 - 2 என்ற கணக்கில் சமநிலையில், இருந்தது, இதன் பின்னர், வழங்கப்பட்ட கூடுதல் நேரம் 30 நிமிடத்தின் முடிவில் இரு அணிகளும் தலா 3 கோல்களுடன் சமநிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
அரசியல் தலைவர்கள் வாழ்த்து
இந்நிலையில் கடும் பலப்பரீட்சைக்க்குப் பிறகு நேற்றிரவு உலகக்கோப்பையை கைகளில் ஏந்திய அர்ஜெண்டினா அணியை நம் நாட்டின் பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட உலகம் முழுவதும் உள்ள கால் பந்து ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்தி வருகின்றனர்.
இந்தியாவில் பெருமளவிலான கால்பந்து ரசிகர்களைக் கொண்ட கேரளம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் நேற்று இரவு தொடங்கி தொடர்ந்து கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ளன.
நேரில் கண்டுகளித்த கேரள சூப்பர் ஸ்டார்கள்
இந்நிலையில், மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் தொடங்கி லுசைல் மைதானத்துக்கு நேரில் சென்று உலகக்கோப்பை இறுதிப்போட்டியை ரசித்து மகிழ்ந்த இந்தியப் பிரபலங்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
லுசைல் மைதானத்தில் இருந்து புகைப்படம் பகிர்ந்திருந்த மம்முட்டி, ”உலகின் மிகப்பெரும் விளையாட்டை பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்ன ஒரு தருணம்” எனக் குறிப்பிட்டு சிலிர்ப்புடன் பகிர்ந்துள்ளார்.
அதேபோல் மற்றுமொரு மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால் பகிர்ந்துள்ள பதிவில், லுசைல் மைதானத்தில் இரு பெரும் அணிகளின் மோதலைக் காண உலகத்துடன் இணைந்து காண காத்துள்ளேன். ஒரு அற்புதமான, பொழுதுபோக்கு விளையாட்டுக்காக உங்களைப் போலவே காத்திருக்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
நேரில் கண்டுகளித்த பாலிவுட் பிரபலங்கள்
அதேபோல் பாலிவுட் நடிகர்கள் கார்த்திக் ஆர்யன், ரன்வீர் சிங் - தீபிகா படுகோன், இயக்குநர் ஃபரா கான் உள்ளிட்ட பலரும் லுசைல் மைதானத்தில் இருந்து புகைப்படங்கள் பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.