நடிகர் சூர்யா நடிப்பு என்பது மட்டுமல்லாமல் பல பொதுச்சேவையிலும் பல ஆண்டு காலமாக ஈடுபட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அகரம் நிறுவனத்தில் கீழ் பல நற்காரியங்கள் நடந்து வருவது அதற்கு சான்றாக விளங்குகிறது. பிரபல நடிகர் சிவகுமாரின் மகனான சூர்யா 1997ம் ஆண்டு வெளியான தளபதி விஜயின் நேருக்கு நேர் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 


ஆரம்ப காலகட்டத்தில் தன்னுடைய நடிப்பிற்காக பெரிய அளவில் விமர்சனம் செய்யப்பட்ட சூர்யா தன்னை தானே மெருகேற்றி இன்று முன்னணி நாயகர்கள் பட்டியலில் உள்ளார் என்றால் அது மிகையல்ல. நந்தா, காக்க காக்க, பிதாமகன் போன்ற பல படங்கள் இன்றளவும் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 


மேலும் தனது மனைவியும் நடிகையுமான ஜோதிகாவின் 36 வயதினிலே படத்தின் மூலம் நடிகர் சூர்யா ஒரு தயாரிப்பாளராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இதுவரை 9 படங்கள் அவருடைய தயாரிப்பில் உருவாகியுள்ளது. இறுதியாக கடந்த 2020ம் ஆண்டு சூரரைப்போற்று படத்தின் மூலம் OTT தளத்தில் தோன்றிய சூர்யா அதன் பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள "சூர்யா 40" படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.    
 
கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்புகள் தடைப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் தனது படப்பிடிப்பை தொடங்கியுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் நடிகர் சூர்யா.