கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்திருப்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை என்றும், கொரோனா தடுப்பூசி போடுவதில் மத்திய அரசு தோல்வியடைந்து விட்டதாகவும் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான திரு. பா. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.  


அவர் தற்போது வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் "இதுவரை இந்திய நாடு சுமார் 5.9 கோடி டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகளை ஏற்றுமதி செய்துள்ளதை நினைத்து பெருமையாக உள்ளது என்று கூறியுள்ளார். ஆனால் அதே சமயம் வெறும் 3 கோடி டோஸ்கள் மட்டுமே இந்திய மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதை நினைத்து வேதனைப்படுகிறேன்" என்றும் தெரிவித்துள்ளார்.


இந்த வேகத்தில் சென்றால் கொரோனாவிற்கும் தடுப்பூசிக்கும் இடையில் நடக்கும் போரில் வைரஸ் வென்றுவிடும். நடமாடும் கொரோனா தடுப்பூசி முகாம்களை அமைக்க வேண்டும் என்றும், தடுப்பூசி போட முன்பாதி செய்வது போன்ற விஷயங்களை அரசு கைவிட வேண்டும் என்றும் அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.