வீட்டில் டீவியில் பாடல்கள் வரிசையாக ஓடிக்கொண்டிருக்கும். அம்மா , அப்பா, மகன் மகள் என அனைவரும் சேர்ந்து அனைவரும் சேர்ந்து பாடல்களை கேட்டுக்கொண்டிருப்பார்கள். அந்த ஒரு பாடல் வந்துவிட்டால் மட்டும் அப்பா உற்சாகமடைந்து விடுகிறார். தனது மகளுக்கு நெருக்கமாக சென்று அமர்ந்து ”பாப்பா நம்ம பாட்டு” என்று  நினைவு படுத்துகிறார். மகள் அப்பாவைப் பார்த்து சிரிக்கிறாள். வீட்டில் இருக்கும் மற்றவர்கள் தங்களுக்கும் அந்த பாடலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாததைப் போல் பாவனை செய்கிறார்கள்.


அப்பாவும் மகளும் சேர்ந்து அந்த பாடலை முனுமுனுத்தவாறு கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஏதோ ஒரு வரியைக் கேட்டு அப்பா தனது மகளை வாஞ்சையோடு பார்க்கிறார், “ பாப்பா” என்று அழைக்கிறார். மகள் அவரை ஏறிட்டுப் பார்க்கிறாள். அவளது கண்களில் இருக்கு நீர்மையைப் பார்த்து அவள் தலையில் அழுத்தமான முத்தமிடுகிறார். அது என்னப் பாடல்.


உனக்கென வேனும் சொல்லு


இந்த உலகம் மிகப்பெரியது மகளே. அதில் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்பதற்குமுன் வா இருவரும் இந்த உலகத்தை ஒரு சுற்று சுற்றிவருவோம் என்று தனது மகளை அழைக்கும் தந்தையின் நேசம் இந்தப் பாடல். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பென்னி தயாலின் குரலில் அமைந்த அழகானப் பாடல்



கண்ணான கண்ணே


தனது கண்முன் நிற்கிறாள் தனது மகள். ஆனால் அவள் மடியில் கிடந்து மனம்விட்டு அழுவதற்கு இயலாத ஆற்றாமையின் குரல் இந்தப் பாடல். டி இமான் இசையில் சிட் ஸ்ரீராம் பாடியிருப்பார்.



வா வா என் தேவதையே


தனது மகள் முதல் முறையாக இந்த பூமியில் கால் பதித்திருக்கிறாள். ஒரு அப்பாவாக அவளுக்கு தான் என்ன செய்ய வேண்டும் . ஒரு மகளின் வருகைக்குப் பின் அந்த ஆணின் மொத்த உலகமும் புதிதாக மாறிவிடுகிறது. தன்னில் ஒரு பகுதியாக உருவெடுட்த்து நடமாடும் இந்த சின்ன உயிரை பார்க்கும்போதெல்லாம் ஒவ்வொரு அனுவிலும்  உயிரசைவைக் காண்கிறான்  தந்தை.



ஆனந்த யாழை மீட்டுகிறாள்


 உன்னுடன் நான் இங்கு இந்த நொடி அனுபவிக்கும் இன்பம் இந்த மண்ணில் ஒருவரும் அனுபவித்திராதது  என்று சொல்கிறார் ஒரு தந்தை. நாமுத்துக்குமார் எழுதி யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருப்பார்.



ஆரிரோ ஆராரிரோ


எல்லா அப்பாக்களும் தங்களது மகள்களுக்கு குழந்தைகளைப் போலத்தான். அவள் நடகப் பழகும்போது இவர்களுகும் புதிதாக நடை பழௌவதாய் உணர்கிறார்கள். அவள் பேசும் மழலை மொழியைத் தான் இந்த உலகமே பேச வேண்டும் என்று கட்டளை போட்டலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. நா முத்துக்குமர் பாடல்வரிகளை எழுதி ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருப்பார்