விஜய் சேதுபதி, ஷாஹித் கபூர் முதன்முறையாக இணைந்து நடிக்கும் ஃபார்சி (Farzi) வெப் சீரிஸின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.
மனோஜ் பாஜ்பாயி, ப்ரியாமணி நடிப்பில் அமேசான் ப்ரைமில் வெளிவந்து பெரும் ஹிட் அடித்த சீரிஸ் ’த ஃபேமிலி மேன்’. இந்தி மொழியில் உருவான இந்த சீரிஸ் இரண்டு சீசன்களாக எடுக்கப்பட்ட நிலையில் சமந்தாவின் நடிப்பில் வெளியான இரண்டாவது சீசனும் பெரும் ஹிட் அடித்தது.
இந்நிலையில், மெகா ஹிட் அடித்த ஃபேமிலி மேன் சீரிஸின் இயக்குநர்கள் ராஜ் & டிகே அடுத்ததாக இயக்கும் ’ஃபார்சி’ வெப் சீரிஸின் ட்ரெயலர் இன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
கோலிவுட்டின் மக்கள் செல்வனாக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி ஏற்கெனவே ’மெர்ரி கிறிஸ்துமஸ்’ படம் மூலம் கத்ரினா கைஃப் உடன் பாலிவுட் சினிமாவில் கால் பதிக்கும் நிலையில், தற்போது ஃபார்சி சீரிஸின் மூலம் வெப் சீரிஸ் உலகிலும் கால் பதிக்கிறார்.
மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூரும் இந்த சீரிஸின் மூலம் வெப் சீரிஸ் உலகில் நுழைந்துள்ளார். இவர்கள் இருவரது ரகளையான காம்போ வெப் சீரிஸ் குறித்த அறிவிப்பு வெளியானது முதல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், இன்று ட்ரெய்லர் வெளியாகி ஷாஹித், விஜய் சேதுபதி இருவரது ரசிகர்களையும் மகிழ்வித்துள்ளது.
தமிழ், இந்தி என இரு மொழிகளிலும் இந்த சீரிஸ் வெளியாகும் நிலையில், விஜய் சேதுபதி தன் சொந்தக் குரலிலேயே இந்தியில் பேசி நடித்துள்ளது அவரது கோலிவுட் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கே கே, ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த வெப் சீரிஸ் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.