இந்தியன் 2 படக்குழுவை சேர்ந்த நடிகர்கள் அடுத்தடுத்து உயிரிழக்கும் சம்பவம் பல்வேறு விவாதங்களை கிளப்பி வைத்துள்ளது. இதனால் இயக்குநர் ஷங்கரும் வருத்தத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. அதனால் இந்தப் படத்தை இயக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் ஷங்கர். 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் மோசமான ஒரு சம்பவம் நடந்தது. நசரத்பேட்டையில் படப்பிடிப்பின் போது ராட்சத கிரேன் விழுந்ததில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர் மதுசூதனராவ், ஆர்ட் உதவியாளர் சந்திரன் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், படப்பிடிப்பும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இந்த சம்பவம் மறைவதற்குள் அடுத்த ஆண்டே இந்தியன் 2 படக்குழுவினருக்கு அடுத்தடுத்து 2 அதிர்ச்சியான சம்பவங்கள் நடந்தன. இந்தியன் 2-ல் நடித்து கொண்டிருந்த நடிகர்கள் விவேக் மற்றும் நெடுமுடி வேணு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தனர். ஏப்ரல் மாதம் விவேக்கும், அக்டோபர் மாதம் நெடுமுடி வேணுவும் உயிரிழந்தனர். இரண்டு முக்கிய நடிகர்களின் இழப்பு இந்தியன் 2 குழுவுக்கு பேரிடியாக விழுந்தது. புதிய தொழில்நுட்பத்தை வைத்து இந்த 2 கதாப்பாத்திரங்களையும் திரையில் கொண்டு வர ஷங்கர் திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டது.
இந்த சம்பவத்திற்கு அடுத்த ஆண்டே மற்றொரு இழப்பையும் சந்தித்தது இந்தியன் 2. இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்த நடிகர் மனோபாலாவும் உயிரிழந்தார். கடந்த மே மாதம் இந்த சம்பவம் நடந்த நிலையில் அடுத்த 4 மாதங்களில் தற்போது நடிகர் மாரிமுத்து மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி அடுத்தடுத்த இழப்புகளை சந்தித்து வருகிறது இந்தியன் 2. படப்பிடிப்பிலும் இயக்குநர் ஷங்கருக்கு இது சவாலான நிலையை உருவாக்கியுள்ளது.
இந்த கதாப்பாத்திரங்களில் வேறு யார் நடிக்கப் போகிறார்கள், இவர்கள் சம்பந்தமான காட்சிகள் எந்த அளவுக்கு முடிக்கப்பட்டுள்ளது, இயக்குநர் ஷங்கர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதையெல்லாம் வைத்து இந்தியன் 2-க்கு ராசியே இல்லை என்ற பேச்சு சமூக வலைதளங்களில் வர ஆரம்பித்துள்ளது. அதோடு சேர்த்து கிரேன் விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆவி பழி வாங்கிறதா என்றும் கோடம்பாக்கம் வட்டாரத்தில் தமாசாக பேசப்பட்டு வருகிறது.