இயக்குநரும் நடிகருமான ஜி. மாரிமுத்து அவர்களின் இறப்பு தென் இந்திய திரையுலகப் பிரபலங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திரையுலக பிரபலங்கள் அவரது குடும்பத்திற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வர, மாரிமுத்து பற்றிய பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து வருகிறார்கள் ரசிகர்கள்.


இந்நிலையில்  நடிகர் அஜித் குமார் குறித்து மாரிமுத்து பேசிய காணொளி ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


மாரிமுத்து


இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து (56) மாரடைப்பால் சென்னையில் இன்று காலமானார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் நாடகம் மூலம் அண்மையில் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் மாரிமுத்து. ‘பரியேறும் பெருமாள்’,  ‘கொம்பன்’ ‘ஜீவா’ ஆகிய படங்களில் இவரின் நடிப்பு கவனம் பெற்றது.  இவர் ‘கண்ணும் கண்ணும்’ மற்றும் ‘புலி வால்’ ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். 


சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற ’ஜெயிலர்’ படத்தில் நடித்திருந்தார். 


இன்று காலை ‘எதிர் நீச்சல்’ சீரியல் டப்பிங் பணியில் பேசிக்கொண்டிருந்தபோது நடிகர் மாரிமுத்து திடீரென மயக்கம் போட்டு விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சக சீரியல் ஊழியர்கள் அருகில் இருந்த சூர்யா ஆஸ்பத்திரிக்கு மாரிமுத்துவை அழைத்துக்கொண்டு விரைய, நெஞ்சு வலி காரணமாக இறந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். மாலை அவரது உடலை தேனி வருஷநாட்டில், நல்லடக்கத்துக்காக கொண்டு செல்ல உள்ளனர்.


அஜித் குமார் செய்த உதவி






இயக்குநராக வேண்டும் என்கிற  கனவில் சென்னை வந்த மாரிமுத்து சினிமாவில் பல்வேறு சவால்களை கஷ்டங்களை எதிர்கொண்டிருக்கிறார். இயக்குநர் வசந்த் நடிகர் அஜித் குமாரை வைத்து இயக்கிய ஆசை திரைப்படத்தின் உதவி இயக்குநராக  பணியாற்றிய மாரிமுத்து கண்ணும் கண்ணும் மற்றும் புலிவால் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கினார். இதனைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி பல்வேறு படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களில் மனதைக் கவர்ந்தார். சினிமா மட்டும் இல்லாமல் எதிர்நீச்சல் சீரியல் மூலம் அனைத்து குடும்பங்களின் ஆதரவையும் பெற்று வந்தார். சில காலம் முன்பாக நேர்காணல் ஒன்றில் நடிகர் அஜித் குமார் குறித்து பேசிய மாரிமுத்து. ”அஜித் குமார் நல்ல மனிதன் என்று எல்லாரும் சொல்வார்கள். ஆனால் அவர் உண்மையாகவே அற்புதமான நல்ல மனிதர். என்னுடைய மகனை 10-ஆம் வகுப்பு வரை படிக்க வைத்தவர் அஜித் குமார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.


மாரிமுத்துவின் திடீர்  இறப்பு தென் இந்திய திரையுலக பிரபலங்களை கலங்கடித்துள்ளது.