நடிகை சாய் பல்லவி சினிமாவில் மறைந்த நடிகை சௌந்தர்யாவின் ஃபார்முலாவை பின்பற்றுவதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். 


பொன்னுமணி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர் சௌந்தர்யா. தொடர்ந்து ரஜினியுடன் அருணாச்சலம் மற்றும் படையப்பா, கமலுடன் காதலா காதலா, விஜயகாந்துடன் தவசி மற்றும் சொக்கத்தங்கம், சத்யராஜூடன் சேனாதிபதி என சில படங்கள் மட்டுமே நடித்தார். அன்றைய காலகட்டத்தில் குறுகிய நேரத்தில் முன்னணி நடிகையாக உயர்ந்தார் சௌந்தர்யா. ஆனால் துரதிஷ்டவசமாக 2004-ஆம் ஆண்டு நடந்த விமான விபத்தில் காலமானார். 


இதனிடையே ஒரு நேர்காணலில், “எங்கு நல்ல கேரக்டர்கள் கிடைக்கிறது. எங்கே ரசிகர்கள் மதிக்கிறார்கள் என்ற இடத்தில்தான் நிறைய நாட்கள் கலைஞர்கள் இருக்க முடியும். எனக்கு தெலுங்கில் வித்தியாசமான நிறைய கேரக்டர்கள் வந்தது. அதனால் நான் நிறைய தெலுங்கு படங்கள் நடித்தேன். இங்கேயே இருந்து விட்டேன். ஆனால் நான் தமிழ் படங்களில் நடிப்பதையும் விரும்புவேன். ஒவ்வொரு வருடமும் எனக்கு என்ன கேரக்டர்கள் வருகிறதோ அதில் ஒன்றை தேர்வு செய்து நான் பண்ணிட்டு தான் இருக்கேன்” என பழைய வீடியோவில் மறைந்த நடிகை சௌந்தர்யா தெரிவித்திருப்பார். 


இதைத்தான் நடிகை சாய் பல்லவி பின்பற்றுவதாக ரசிகர்கள் ஒப்பீடு செய்துள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் பல்லவி மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அப்படம் அவருக்கு இந்திய அளவில் ரசிகர்களைப் பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து தமிழில் மாரி 2 படம் மூலம் அறிமுகமானார். மேலும் தியா, என்ஜிகே உள்ளிட்ட ஒரு சில படங்கள் மட்டுமே பண்ணியுள்ளார். அடுத்ததாக சிவகார்த்திகேயன் ஜோடியாக அமரன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. 


அதேசமயம் நேர்காணல் ஒன்றில் பேசிய சாய் பல்லவி, “நான் தமிழில் கொஞ்ச நாள் படம் பண்ணாம இருந்தாலும், தெலுங்கில் நான் நடித்த படங்களைப் பார்த்து, இங்கு நான் எங்கேயாவது செல்லும்போது அப்படத்தின் பெயரை சொல்லி பேசுவது எனக்கு சந்தோசமாக இருக்கும். ஓ நீங்க அந்த படமெல்லாம் பார்த்தீங்களா என மகிழ்ச்சியாக இருக்கும். 


நான் வேறொரு ஊரில் வேறொரு மொழியில் படம் பண்ணினால் கூட நம்ம பொண்ணு அங்க நடிச்சிருக்குன்னு நியாபகம் வெச்சு படம் பார்ப்பது ரொம்ப சந்தோசமா இருக்குது. நமக்குன்னு சில கதைகள் எழுதப்பட்டிருக்கும். அது எந்த மொழிகளில் வருகிறதோ, அங்கே போய் பண்ண வேண்டியதுதான். எப்போது தமிழில் கதை வருகிறதோ அப்ப பண்ண வேண்டியதுதான்” என கூறியிருப்பார். 


ஆம், தமிழை விட தெலுங்கு திரையுலகம் சாய்பல்லவியை கொண்டாடி வருகிறது. அங்கு மிடில் கிளாஸ் அப்பாயி, படி படி லெச்சே மனசு, லவ் ஸ்டோரி, சியாம் சிங்கா ராய், விராட பர்வம் என சாய் பல்லவி நடித்த படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.