திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் 2024-2025 ஆம் ஆண்டிற்கு திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்குட்டபட்ட அனைத்து பள்ளி பேருந்து வாகனங்களை மாவட்ட அளவிலான குழு கூட்டாய்வு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் சமீபத்தில் ஆய்வு செய்தார். இந்நிகழ்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயன் உடனிருந்தனர்.


மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்ததாவது:


ஒவ்வொரு ஆண்டும் கல்வி நிறுவன வாகனங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசு சிறப்பு விதிகள் 2012-ன்படி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 129 பள்ளிகளை சேர்ந்த 736 வாகனங்கள் ஆய்விற்காக ஆயுதப்படை மைதானத்திற்கு கொண்டுவரப்பட்டது. இந்த ஆய்வில் மாவட்ட அளவிலான இடைநிலை குழுவில் உள்ள வருவாய் கோட்டாட்சியர், வட்டார போக்குவரத்து அலுவலர், காவல் துணை கண்காணிப்பாளர், முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை ஐஃஐஐஇ ஆகியோருடன் ஆய்வு செய்தனர். பள்ளி வாகனங்கள் 50 கிலோமீட்டர் வேகத்திற்குள் இயக்க வேண்டுமென்றும், வாகனத்தின் நிறம், முதலுதவி பெட்டிகள், அவசர வழி இருக்கைகள், சிசிடிவி கேமராக்கள் ஆகியவை சரியாக உள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டது.




 


மேலும் வாகன ஓட்டுநர்களிடம் கையாள வேண்டிய நடைமுறைகள் குறித்து அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் ஜிபிஎஸ் கருவிகள் மூலம் வாகனத்தின் இயக்கம் தொடர்ந்து கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. மாணவர்களை ஏற்றி செல்லும் போது 50 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் வாகனத்தை இயக்கினால் வாகன உரிமம் ரத்து செய்யப்படும். இந்த ஆய்வின்போது பள்ளி வாகனங்களின் குறைபாடுகள் ஏதேனும் கண்டயறிப்படும்பட்சத்தில் வாகனங்களின் தகுதி சான்று (Fitness Certificate) ரத்து செய்யப்பட்டு பின்னர் குறைபாடுகளை நிவர்த்தி செய்து மீண்டும் ஆய்விற்கு  உட்படுத்தப்படும் பட்சத்தில் மேற்படி வாகனங்கள் பொது சாலையில் இயக்க அனுமதிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். மேலும் ஆய்விற்கு உட்படுத்தப்படும் வாகனங்களின் முன்புற கண்ணாடியில் ஆய்வு செய்யப்பட்டதற்கான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட உள்ளது. மேற்படி ஸ்டிக்கர் ஒட்டப்படாத வாகனங்கள் பள்ளிகள் மூலமாக இயக்குவதற்கு அனுமதி மறுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஓட்டுனர்கள் பள்ளிவாகனத்தை மிகவும் கவனமாக இயக்கவேண்டும் பள்ளிவாகனதிற்கு விபத்து ஏற்பட்டால் ஓட்டுனரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரித்தார்.


 





மேலும் ஓட்டுநர்கள் தங்கள் உடல்நிலையை கவனத்தில் கொள்ள வேண்டுமென்றும், தண்ணீர் பாட்டில்களை ஓட்டுநர் இருக்கை அருகில் வைக்கக் வேண்டாமென்றும், ரியாக்ஷன் டைமிங்கினை கவனத்தில் கொள்ளவும் வாகனங்களை இயக்குவதற்கு முன் வாகனத்தினை பரிசோதித்த பின்னரே இயக்க வேண்டுமென்று மாவட்ட ஆட்சித்தலைவர் பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கும் பள்ளி தாளாளர்களுக்கும் விபத்தில்லாமல் வாகனம் இயக்குவதற்கான அறிவுரைகளை வழங்கினார். இதனை தொடர்ந்து பள்ளி பேருந்து ஓட்டுநர்களுக்கு தீயணைப்பு துறையினரால் பள்ளி வாகனங்கள் தீப்பிடிக்கும் நிலை ஏற்படுமாயின் தீயினைக் கட்டுப்படுத்த வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செயல்முறைகள் செய்து காண்பிக்கப்பட்டது. மேலும் விபத்து ஏற்படும் பட்சத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முதலுதவி குறித்து 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மூலம் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த ஆய்வில் வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் பழனி, திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் செ.சிவகுமார், மோட்டார் வாகன ஆய்வாளர் ரெ.பெரியசாமி தீயணைப்புத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.