பிரபல வில்லன் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் ஆந்திர மாநிலத்தில் நடைபெற்று வரும் தேர்தலில் வாக்களிக்க வந்த வீடியோ ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிராணம் கீரகிடு என்ற தெலுங்கு படம் மூலம் 1978 ஆம் ஆண்டில் சினிமாவில் அறிமுகமானவர் கோட்டா சீனிவாச ராவ். அந்த திரையுலகில் பல படங்களில் வில்லனாக நடித்து மாஸ் காட்டிய அவர் 1987 ஆம் ஆண்டு இந்தி சினிமாவில் எண்ட்ரீ கொடுத்தார். 2003 ஆம் ஆண்டில் சாமி படம் தமிழில் அறிமுகமானார். அப்படத்தில் பெருமாள் பிச்சை என்ற கேரக்டர் இன்றளவும் தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்றாக உள்ளது. தொடர்ந்து தமிழில் குத்து, ஜோர், ஏய், திருப்பாச்சி, ஜெய்சூர்யா, பரமசிவன், கொக்கி, சாது மிரண்டா, சத்யம், தனம், பெருமாள், லாடம், ஜெகன்மோகினி, பவானி, கோ, மம்பட்டியான், சகுனி, தாண்டவம், ஆன் இன் ஆல் அழகுராஜா, டமால் டூமில், மரகத நாணயம் என ஏகப்பட்ட படங்களில் வில்லன் மற்றும் காமெடி வேடங்களில் நடித்துள்ளார்.
இதனிடையே 81 வயதாகும் கோட்டா சீனிவாச ராவ் ஆந்திர மாநில சட்டமன்ற உறுப்பினராக 1999 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார். அவருடைய கலைசேவையை பாராட்டி 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கி கௌரவித்தது. இந்நிலையில் ஆந்திராவில் இன்று மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவானது நடைபெற்று வருகிறது.
இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். திரைப்பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் காலையிலேயே வந்து தங்கள் ஜனநாயக கடமையாற்றியதோடு மட்டுமல்லாமல் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இதன் புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலானது. இப்படியான நிலையில் கோட்டா சீனிவாச ராவ் வாக்களிக்க வருகை தந்த வீடியோ ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.
ஒரு காலத்தில் கம்பீரமான வில்லனாக வலம் வந்த அவர், இன்று நடக்க முடியாதபடி பிறரின் துணையோடு தள்ளாடியபடி வருகை தரும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளது.