சாண்ட்லர் பிங்




உலகம் முழுவதும் உள்ள மக்களால் கொண்டாடப் பட்ட ஒரு தொலைக்காட்சித் தொடர் ஃப்ரண்ட்ஸ். 1994 முதல் 2004 வரை 10  ஆண்டுகள் ஒளிபரப்பப் பட்ட இந்த தொடர் இன்றுவரை கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளது. ஆறு நண்பர்களைப் பற்றிய இந்த கதையை ரசிகர்கள் தங்களது வாழ்க்கையின் மிக நெருக்கமான தருணங்களுடன் தொடர்புபடுத்திக் கொள்கிறார்கள். மனச் சோர்வில் இருக்கும்போது கொஞ்சம் இலகுவாக இதை பார்க்கிறார்கள். அடுத்து என்ன வசனம் வரப்போகிறது என்பதை மனப்பாடமாக வைத்திருக்கும் அளவிற்கு ரிபீட் மோடில் பார்க்கிறார்கள். இந்த ஆறு நண்பர்களில் ஒருவரான சாண்ட்லர் கதாபாத்திரத்தில் நடித்த மேத்யு பெர்ரி இன்று உயிரிழந்துள்ளது ஃப்ரண்ட்ஸ் தொடர் ரசிகர்களுக்கு அதிர்யளிக்கும் செய்தியாக வந்து சேர்ந்துள்ளது. இனி மீண்டும் தங்களால் இந்த தொடரை அதே மகிழ்ச்சியுடன் அதே உற்சாகத்துடன் அவர்களால் பார்க்க முடியுமா என்பது கேள்வியே. சாண்ட்லர் கதாபாத்திரம் தங்களது மனதில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பதை ரசிகர்கள் பகிர்ந்துள்ளார்கள்.


 உங்கள் வாழ்க்கையில் ஒரு இந்த மாதிரி ஒருவர் இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டம் செய்தவர்




"சாண்ட்லரும் மேத்யுவும் வேறு நபர்கள் இல்லை. சமீபத்தில் ஃப்ரண்ட்ஸ் தொடரின்  நடிகர்களின் ரீயூனியனின் போது அவர்கள் அனைவரையும் சேர்த்து பார்க்க அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. இன்னொரு முறைய அதற்கு சாத்தியமில்லை. சாண்லர் பிங் நம் அனைவராலும் தொடர்புபடுத்தி பார்த்துகொள்ள முடிந்த ஒரு கதாபாத்திரம். நான் கோடீஸ்வரனாக விரும்பிகிறேன் என்கிற வசனத்தில் தொடங்கி தொடர் முழுவதும் அவரது கதாபாத்திரம் வியப்பூட்டுவதாக இருக்கும்..எளிதில் புன்படக்கூடிய மனம் ,அன்பிற்காக ஏங்குவது அதே நேரத்தில் நகைச்சுவை உணர்வு, சாண்ட்லரின் கடந்த காலம் வலி நிறைந்தது. அவனுக்கு அவனது பெற்றோர்களுக்குமான உறவு சிக்கலானது. தான் செய்யும் வேலை அவனுக்கு பிடிப்பதில்லை ஆனால் அதை விடவும் முடிவதில்லை. பொறுப்புகளை எடுத்துக்கொள்ள தயங்குபவன். தொடர்பு படுத்திக் கொள்ள முடிகிறது இல்லையா...

ஆனால் கடைசியில் சாண்ட்லர் தன் காதலை கண்டுபிடிக்கிறான். அவனது நண்பர்கள் அவன் பக்கம் நிற்கிறார்கள். அவனுக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன. தனக்கு பிடித்தமான வேலையை அவன் கண்டுபிடிக்கிறான். நம் எல்லாருக்கும் ஏதோ ஒரு வகையில் சாண்ட்லரைப் போல் வாழ வேண்டும் அல்லது அவனைப் போன்ற ஒருவர் நம் வாழ்க்கையில் அருகில் இருக்க வேண்டும். ஜோவை அவன் அக்கறையாக கவணித்துக் கொள்வதும், மோனிகாவை கையாள்வதும் , ராஸ்க்கு ஒரு நல்ல நண்பனாக இருப்பது. எல்லாவற்றுக்கும் மேல் அதிகம் பேசப்படாத ரேச்சல் மற்றும் சாண்ட்லர் ஆகிய இருவருக்கும் இடையிலான உறவு. உங்களது வாழ்க்கையில் சாண்ட்லர் மாதிரி ஒருவர் இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டம் செய்தவர்.” -தாரணி குமார். உடை வடிவமைப்பாளர்


 நாம் எல்லாரும் அவரை நினைவுகூறுவோம்




என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் என்னை சாண்ட்லர் என்று அடிக்கடி அழைப்பார். சாண்ட்லர் இறந்த செய்தியைக் கேட்டபோது நான் என்னுடய நண்பரை நினைத்துக் கொண்டேன். அவர் சாண்டரை மிஸ் செய்வார். அவரைப் போல் இன்னும் எத்தனையோ நபர்கள். மக்கள் சாண்ட்லரை எப்போது கொண்டாடுவார்கள். அவர் எப்போது நம்முடன் இருந்துகொண்டே இருப்பார்.” - கீர்த்திவாசன். கல்லூரி மாணவர்


இன்னும் சில காலம்




நாம்  நேசிக்கும் மனிதர்கள் வயதாகி இந்த பூமியை விட்டு பிரிவது தான் முதுமையின் மிகப்பெரிய சாபம். எனக்கான நண்பர்கள் குழு ஒன்று எனக்கு கிடைத்தது. அப்போது அவர்களுடன் சேர்ந்து பார்த்தது தான் ப்ஃரண்ட்ஸ். பிறகு ஒருசில காரணங்களால் என்னைச் சுற்றி யாரும் இல்லாதபோதும் என்க்காக இருந்தது ஃப்ரண்ட்ஸ் தான். வாழ்க்கையில் எல்லாத் தருணங்களிலும் ஃப்ரண்ட்ஸ் தொடரை நாடியிருக்கிறேன். எதுவும் உறுதியாக இல்லாத நேரத்தில் கூட என்னை அது ஆசுவாசப் படுத்தியிருக்கிறது. இனிமேல் நான் மீண்டும் அந்த தொடரை எப்படி பார்ப்பேன் என்று தெரியவில்லை. மேத்யு பெர்ரி நீங்கள் உங்கள் வாழ்க்கையில் போதைப் பழக்கத்துடன் போராடி இருக்கிறீர்கள். நீங்கள் அதைவிட்டு விலகி இருந்து வெறும் இரண்டு ஆண்டுகளே ஆகியிருக்கின்றன.  வாழ்க்கை உங்களுக்கு இன்னும் சில காலத்தை அனுமதித்திருக்கலாம். ஆழ்ந்த இரங்கல்’” வித்யா விஜயராகவன்.


சாண்ட்லர் இல்லாத உலகம் கொஞ்சம் சலிப்பானது


 


இணையதளத்தில் ரசிகர் ஒருவரின் பதிவு சாண்டலர் இந்திய ரசிகர்களின் உணர்ச்சிகளுடன் எவ்வளவு ஆழமாக கலந்திருக்கிறார் எனபதற்கு சிறந்த உதாரணம் “ சாண்ட்லர் இல்லாத உலகம் கொஞ்சம் சலிப்பானது தான் “ என்று அவர் பதிவிட்டுள்ளார்






தன்னுடைய பலவீனங்களை மறைக்காதவர்




ஒரு மனிதனிடம் உள்ள பிழைகளையும் ஏற்றுக் கொண்டு அதை தாழ்வாக கருதாமல் எவ்வாறு வாழ்க்கையை புன்னகையுடன் முன்னெடுக்க முடியும் என்பதை சாண்ட்லர் பிங் பாத்திரம் வாழ்ந்து காட்டியிருக்கும். திரைக்கு வெளியேவும் தனக்கு உள்ள பலவீனங்களை அவர் மறைக்க முற்பட்டதில்லை. மாறாக தன்னுடைய பலவீனங்களுடனான போராட்டத்தை வெளிப்படையாக பேசி பல சமூக களங்களை மாற்றியிருப்பார். கச்சிதமான வாழ்க்கையும் இல்லை, மனிதரும் இல்லை. ஆனால் அதை யதார்த்தமாக எடுத்துக் கொள்வதற்கு இலக்கணமாக சாண்ட்லர் பிங் மற்றும் மேத்யூ பெர்ரி வாழ்க்கை அமைந்திருக்கிறது. சென்று வாருங்கள் சாண்ட்லர் பிங். நீங்கள் எப்போதும் நினைவுகூறப்படுவீர்கள்.” மோகன். பத்திரிகையாளர்.