கொச்சி களமசேரியில் உள்ள மாநாட்டு மையத்தில் இன்று காலை வெடிகுண்டு வைத்தது தம்மனத்தைச் சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பதை கேரள போலீசார் தற்போது உறுதிப்படுத்தியுள்ளனர். அதில், டொமினிக்கின் தொலைபேசியில் ஐஇடி- ஐ வெடிக்க பயன்படுத்திய ரிமோட் கண்ட்ரோலின் காட்சிகளையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். 


முன்னதாக, யேகோவா குழுவின் உறுப்பினராக இருந்த டொமினிக் மார்ட்டின், கொடகரா காவல்நிலையத்தில் சரணடைவதற்கு முன்பு அவர் வெளியிட்ட ஃபேஸ்புக் லைவில் தான் செய்த குற்றத்தையும், அதற்கான உந்துதல் என்ன என்பது குறித்தும் பேசினார். அப்போது அவர், “ வெறுப்பை வளர்க்கும் வழிகளை மாற்றுமாறு கிறிஸ்துவப் பிரிவினரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தேன். ஆனால், தொடர்ந்து அவர்கள் வெறுப்பு பிரச்சாரத்தை மட்டும் செய்தனர். நான் சொல்வதை காதிலேயே வாங்கவில்லை. எனவே, மாநாட்டில் வெடிகுண்டு வைக்க முடிவு செய்தேன்” என்று தெரிவித்தார். 






களமசேரி, கேரள ஏடிஜிபி (சட்டம்-ஒழுங்கு) எம்.ஆர்.அஜித் குமார் கூறுகையில், "திருச்சூர் கிராமியத்தில் உள்ள கொடகரா காவல்நிலையத்தில் ஒருவர் சரணடைந்துள்ளார். அவர் பெயர் டொமினிக் மார்ட்டின். சரணடைந்த அவரும் அதே குழுவை சேர்ந்தவர் என்று கூறுகிறார். இதையடுத்து, அவர் சொன்னது சரிதான என்று நாங்கள் அதை ஆராய்ந்து வருகிறோம். மேலும், இந்த வழக்கு தொடர்பாக நாங்கள் அனைத்தையும் ஆராய்ந்து வருகிறோம். மண்டபத்தின் மையப் பகுதியில் குண்டுவெடிப்பு நடந்தது.” என தெரிவித்தார். 


குண்டுவெடிப்புக்கு அவர்தான் காரணமா என்பதை போலீசார் இன்னும் கண்டறியவில்லை. மார்ட்டின் என்ற நபரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்ட கண்டுபிடிப்புகளின்படி, வெடிபொருட்கள் டிபன் பாக்ஸில் வைக்கப்பட்டிருந்தன. முதல் வெடிப்பு காலை 9:40 மணிக்கு ஏற்பட்டது என்று கேரள டிஜிபி ஷேக் தர்வேஷ் சாஹேப் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன், திங்கள்கிழமை (நாளை) காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குத் திட்டமிட்டுள்ளார். இதற்கு பினராயி விஜயன் தலைமை தாங்குவார் என்று கூறப்பட்டுள்ளது. 


விஜயன் நிலைமை மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று கூறினார். அனைத்து பகுதிகளும் முழுமையாக விசாரிக்கப்படும் என்று அவர் வலியுறுத்தினார். கட்சிக் கூட்டத்திற்காக டெல்லி வந்துள்ள முதல்வர் விஜயன், மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் வி.என்.வாசவனை நியமித்துள்ளார்.


"இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம். சம்பவம் தொடர்பான விவரங்களை சேகரித்து வருகிறோம். எர்ணாகுளத்தில் உள்ள அனைத்து உயர் அதிகாரிகளும் உள்ளனர். நாங்கள் இதை மிகவும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். டிஜிபியிடம் பேசியுள்ளேன், விசாரணைக்குப் பிறகு கூடுதல் விவரங்கள் கிடைக்கும்" என்று முதல்வர் பினராயி விஜயன் கூறினார். 


பிரார்த்தனைக் கூட்டத்தில் நேரில் பார்த்தவர்கள் பல வெடிச்சத்தங்களைக் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். 


காவல்துறையின் கூற்றுப்படி, யெகோவாவின் குழுவின் பிரார்த்தனை கூட்டம் நடைபெறும் இடத்திலிருந்து பல வெடிப்புகள் பதிவாகியுள்ளன. இதையடுத்து, காலை 9 மணியளவில் குண்டு வெடிப்பு நடந்த அரங்கம் சீல் வைக்கப்பட்டு, கேரள காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் படை சம்பவ இடத்துக்குச் சென்றது. யெகோவா சாட்சிகள் மாநாடு என்பது வருடாந்தர ஒன்றுகூடல் ஆகும். இதில் பிராந்திய மாநாடுகள் எனப்படும் பாரிய கூட்டங்கள் மூன்று நாட்களுக்கு நடத்தப்படுகின்றன. இந்த நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி, இன்று ஞாயிற்றுக்கிழமை முடிவடைய திட்டமிடப்பட்டது.