இந்தியில் உருவாகி வரும் ஹ்ரித்திக் ரோஷனின் “வார் 2” படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


தமிழ் சினிமாவில் ஒரு எல்.சி.யு. (லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்) இருப்பது போல, இந்தி சினிமாவில் ஒய்.எஸ்.யு (YSU) என்ற யுனிவர்ஸ் உள்ளது. அதுதான் பிரபல தயாரிப்பாளரான யாஷ்ராஜின் ஸ்பை யுனிவர்ஸ். இதில் இதுவரை ஏக் தா டைகர், டைகர் ஸிந்தா ஹை, வார், பதான் மற்றும் டைகர் 3 ஆகிய படங்கள் இதுவரை வெளியாகியுள்ளது. இதில் டைகர் 3 படம் கடந்த நவம்பர் 12 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 


இதனிடையே இந்த யுனிவர்ஸில் வார் படம் 2019ம் ஆண்டு வெளியானது. ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷெராஃப் நடிப்பில் உருவான இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியிருந்தார். ஆக்‌ஷன் கதைக்களைத்தை மையமாக கொண்டு வெளியான இந்த ஸ்பை த்ரில்லர் படம் ரூ.170 கோடி பட்ஜெட்டில் உருவானது. ஆனால் ரிலீசான பிறகு ரூ.475 கோடி வசூலை வாரிக் குவித்தது. இப்படியான நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் “வார் 2” படம் தொடர்பான அறிவிப்பு வெளியானது.






அதில் ஹ்ரித்திக் ரோஷனுடன் ஜூனியர் என்.டி.ஆர். இணைந்து நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அவருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிப்பார் எனவும் கூறப்பட்டது. இதனால் அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவாக உள்ள வார் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் அதிகரித்தது. ஏற்கனவே ஆர்.ஆர்.ஆர். படம் மூலம் உலகளவில் புகழ் பெற்ற ஜுனியர் என்.டி.ஆருக்கு வார் 2 படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


ஏற்கனவே இந்த யூனிவர்ஸை சேர்ந்த  பதான் திரைப்படம் இந்தாண்டு முதல் பாதியில் வெளியாகி சுமார் 1000 கோடி ரூபாய் வசூலை வாரிக்குவித்தது. இதைதொடர்ந்து டைகர் 3 படமும் ரூ.500 கோடி அளவில் வசூலை ஈட்டியுள்ளது. இந்நிலையில் வார் 2 படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படமும் கண்டிப்பாக ரூ.1000 கோடி வசூலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது,