ஐபிஎல் தொடரில் இன்றைய லீக் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு சின்னசாமி மைதானத்தில் இந்த போட்டி தொடங்க உள்ளது.
சென்னை - பெங்களூரு மோதல்:
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டுப்ளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும், ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் நேரலையில் கண்டு ரசிக்கலாம்.
நடப்பு தொடரில் இதுவரை:
நடப்பு தொடரில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் தலா 4 போட்டிகளில் விளையாடி, தலா 2 வெற்றி மற்றும் 2 தோல்விகளை சந்தித்துள்ளன. இதையடுத்து ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் முறையே 6 மற்றும் 7வது இடங்களை வகிக்கின்றன. சென்னை அணி கடைசியாக விளையாடிய போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்தது. பெங்களூரு அணி கடைசியாக விளையாடிய போட்டியில், டெல்லி அணிக்கு எதிராக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
அணிகளின் நிலவரம்:
சென்னை அணியில் ருதுராஜ், கான்வே, ரகானே, தோனி ஆகியோர் உடன் இம்பேக்ட் பிளேயராக களமிறங்கும் ராயுடுவும் நம்பிக்கை அளிக்கிறார். சாண்ட்னர், மொயீன் அலி மற்றும் ஜடேஜா ஆகியோர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சென்னை அணிக்கு வலுசேர்க்கின்றனர். பெங்களூரு அணியில் கோலி, டுப்ளெசிஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டாலும் நடுகள வீரர்கள் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்தால் மட்டுமே சென்னை அணியின் பேட்டிங் ஆர்டரை சமாளிக்க முடியும்.
மைதான நிலவரம்:
பெங்களூரு சின்னசாமி மைதானம் முழுக்க முழுக்க பேட்டிங்கிற்கு சாதகமானது என்பது அனைவரும் அறிந்ததே. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து சேஸிங் செய்யவே விரும்பும். எனவே, முதலில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கும் அணி மிகப்பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டியது கட்டாயம்.
சிறந்த பேட்ஸ்மேன் - இன்றை போட்டியின் சிறந்த பேட்ஸ்மேன் ஆக கோலி திகழ வாய்ப்புள்ளது. நடப்பு தொடரில் 4 போட்டிகளில் விளையாடி 3 அரைசதங்களை அவர் விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறந்த பந்துவீச்சாளர்: இன்றைய போட்டியின் சிறந்து பந்துவீச்சாளராக ஜடேஜா திகழ வாய்ப்புள்ளது.
சென்னை உத்தேச அணி:
கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், ரகானே, மொயீன் அலி, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, தோனி, மிட்செல் சாண்ட்னர், மகேஷ் தீக்ஷனா, ஆகாஷ் சிங், துஷார் தேஷ்பாண்டே
பெங்களூரு உத்தேச அணி:
கோலி, டுபிளெசிஸ், மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் , வெய்ன் பார்னெல், வனிந்து ஹசரங்க, ஹர்ஷல் படேல், வைஷாக் விஜய்குமார், முகமது சிராஜ்