நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி குடும்பங்களை கவர்ந்த “சந்தோஷ் சுப்பிரமணியம்” படம் வெளியாகி இன்றோடு 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த படம் உருவான விதம் குறித்து காணலாம். 


ஜெயம் படத்தின் தமிழ் சினிமாவில் ரவி ஹீரோவாக அறிமுகமானார். இப்படத்தை அவரது அண்ணன்  ராஜா இயக்கியிருந்தார். இது ஒரு தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகும். தொடர்ந்து எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும் என இந்த கூட்டணியின் 4வது படைப்பாக வெளியானது தான் “சந்தோஷ் சுப்பிரமணியம்”. இப்போது டிவியில் போட்டாலும்  சிறியவர் முதல் பெரியவர் வரை சேனலை மாற்றாமல் பார்க்கும் படங்களில் இந்த படமும் ஒன்று. 


சந்தோஷ் சுப்பிரமணியம் உருவான கதை 


தெலுங்கில் இப்படம் பொம்மரீலு என்ற பெயரில் வெளியாகியிருந்தது. இதனை எடுத்த பாஸ்கரும், ராஜாவும் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் நண்பர்கள். ஜெயம், எம்.குமரன் படங்களை கண்டிப்பாக தமிழில் ரீமேக் செய்ய வேண்டும் என நினைத்து எடுக்கப்பட்ட படங்களாக இருந்த நிலையில் சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தை நீதான் ரீமேக் செய்ய வேண்டும் என பிரபலம் ஒருவர் ராஜாவிடம் கேட்டுள்ளார். 


அவர் வேறு யாருமல்ல. பொம்மரீலு படத்தின் ரீமேக் உரிமையை பெற்றிருந்த நடிகர் பிரகாஷ்ராஜ் தான். அவர் சில பிரபலங்களை இந்த படத்திற்காக பரிந்துரைத்த போதிலும் ராஜாவுக்கு அதில் விருப்பமில்லாமல் இருந்துள்ளது. மேலும் ரவியையே இந்த படத்தில் நடிக்க வைக்கலாம் என எண்ணியுள்ளார். அப்போது ஜெயம் ரவி ஏஜிஎஸ் நிறுவனத்தில் படம் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார். அந்நிறுவனத்திடம் ராஜா பேச, பிரகாஷ்ராஜிடம் இருந்து படத்தின் ரீமேக் உரிமை ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு கை மாறியுள்ளது. 


ராஜா எடுத்த முடிவு 


நேர்காணல் ஒன்றில் இப்படம் பற்றி பேசியுள்ள ராஜா, "பொம்மரீலுவை ரீமேக் செய்யும் போது இப்படம் முழுக்க முழுக்க ரசிகர்கள் சிரித்து மகிழக்கூடிய அளவில் இருக்க வேண்டுமென முடிவு பண்ணேன். அடுத்தது ஒரிஜினல் படத்தோட ஒப்பிடுகையில் தமிழில் காட்சிகளை இன்னும் உணர்வுப்பூர்வமா எடுக்கணும்ன்னு நினைச்சேன். அந்த அளவுக்கு பார்த்து பார்த்து சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தை பண்ணினேன் " என தெரிவித்துள்ளார். 


மேலும், "இந்த படம் எடுக்குறப்ப எனக்கும் ரவிக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுச்சு. தன்னோட கேரக்டரை விட மற்றவர்கள் கேரக்டர்களுக்கு அதிக கவனம் செலுத்தியதாக என்னிடம் சொன்னான். நான் உடனே என்னைவிட நீதான் அதிகமா ஒழுங்கா பார்த்து உள்வாங்கி நடிக்கிறதா சொல்லி புரிய வச்சேன். கிளைமேக்ஸ் காட்சி 14 பக்க வசனம் இருந்தது. அதனை ஒரே டேக்ல பேசி ரவி அசத்தினான்.  ரவி நிஜமாகவே எமோஷனலாகிட்டான்.


அந்நேரம் ஒரு அண்ணனா நான் போய் சமாதானம் செய்றதுக்கு முன்னாடி பிரகாஷ்ராஜ் இரண்டு நிமிஷமா கட்டிப்பிடிச்சிகிட்டார். அதேபோல் முதலிலேயே இப்படத்தில் ஹீரோயின் ஜெனிலியா தான் என முடிவு பண்னேன். என்னுடைய முந்தைய ரீமேக் படங்களிலும் ஒரிஜினல் வெர்ஷனில் ஹீரோயினாக நடித்தவர்களே ரீமேக்கிலும் ஹீரோயினாக செய்திருந்தார்கள்" என அந்த நேர்காணலில் ராஜா தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.