பிரபல சமையல் சேனல் நடத்தி வரும் யோகாம்பாள் தன்னுடைய வாழ்க்கையை புரட்டிப்போட்ட நிகழ்வை நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்ட நிலையில், யூட்யூப் சேனல்கள் அனைத்து விஷயங்களையும் படம் போட்டு விளக்கும் வண்ணம் வயது வித்தியாசமில்லாமல் அனைவராலும் தொடங்கப்பட்டு வருகிறது. அதில் சமையல் தொடர்பான சேனல்கள் என்றால் சொல்லவா வேண்டும். இதில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே தனித்து தெரிவார்கள். அதில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட ஃபாலோயர்களை கொண்ட ”யோகாம்பாள் சுந்தர்” யூட்யூப் சேனல் மிகவும் பிரபலம். 


அதில் யோகாம்பாள் செய்யும் ரெசிபி வகைகளுக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவர் நேர்காணல் ஒன்றில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சோக சம்பவத்தையும், தான் இந்த நிலைக்கு உயர என்ன காரணம் என்பதையும் தெரிவித்துள்ளார். அதில், “யோகாம்பாள் சுந்தர் வீடு மற்றும் நண்பர்கள் வட்டத்தில் மட்டும் தான் நன்றாக சமைப்பாள் என்பது தெரியும். தம்பி பொண்ணு ஒருவர் தான் தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சி பற்றி சொன்னார். எனக்கு உடல் எடை பருமன், பிராமண பேச்சு எல்லாம் அதில் கலந்து கொள்ள தயக்கம் இருந்தது. ஆனால் சேனல் நிர்வாகம் நம்பிக்கை கொடுத்தது. ஒரு 20 எபிசோட் பார்க்கலாம். நன்றாக போச்சு என்றால் மேற்கொண்டு பண்ணலாம் என சொன்னார்கள். ஆனால் 5வது எபிசோட் 20 லட்சம் பார்வைகளை பெற்று பிரபலமானது. 


அதன்பிறகு என் வீட்டில் உள்ளவர்கள் யூட்யூப் சேனல் பற்றி ஐடியா கொடுத்தார்கள். 2010 ஆம் ஆண்டு என் மகன் இதுபற்றி சொன்னான். ஆனால் நாம ஆரம்பிச்சு என்ன பண்ணப்போறோம்ன்னு வேண்டாம்ன்னு சொல்லிட்டேன். சமையல் தொடர்பா நிறைய யூட்யூப் சேனல்கள் இருக்கு. மத்ததுல இருந்து நம்மளோடது தனியா தெரியணும்ன்னு நினைச்சோம். 


அதன்படி பண்டிகை தொடர்பான அத்தனை தகவல்களும் அளித்தோம். எனக்கு திருமணமான புதிதில் இப்படிப்பட்ட விஷயமெல்லாம் எனக்கு தெரியாது. சமையலும் சாதாரணமான விஷயங்கள் மட்டுமே தெரியும். நான் இப்படி மாறியதற்கு காரணம் என் கணவர் சுந்தரம் தான். 


780க்கும் மேற்பட்ட எபிசோட் பண்ணிருக்கும் நிலையில் அதில் இருக்கும் 500க்கும் மேற்பட்ட சமையல் என் கணவருக்கு செய்து கொடுத்தது தான். அவருக்கு 2008ல இதய அறுவை சிகிச்சை நடந்தது. அவரும் நல்லா சாப்பிடுவாரு. அதேசமயம் என்னுடைய சகோதரியும் வயிறு புற்றுநோய் சிகிச்சைகாக என்னோட வந்து இருந்தார். அவருக்கும் நான் சமைச்சி கொடுப்பேன். அவள் தான், ‘இந்த சமையல் கலை எப்படியாவது வெளியே வர வேண்டும்’ என சொன்னார். அவர்களின் ஆசீர்வாதம் தான் நான் சமையல் வீடியோக்களை பதிவிட காரணமா என தெரியவில்லை. 


என்னுடைய வாழ்க்கையில் 2011 ஆம் ஆண்டு தான் திருப்புமுனையாக அமைந்தது. அந்தாண்டு மார்ச் மாதம் நானும் என் கணவரும் சேர்ந்து அமெரிக்காவுக்கு செல்வதாக இருந்தோம். 23 ஆம் தேதி நாங்க கிளம்புவதாக இருந்தோம். என்னுடைய மகள் அங்கே படித்து கொண்டிருந்த நிலையில், திடீரென அவர் மட்டும் வேலை கணக்கு முடிக்க வேண்டியிருந்ததால் என்னை முன்னாடி போக சொல்லிவிட்டு டிக்கெட்டை வேறு தேதிக்கு மாற்றியிருந்தார். நான் மார்ச் 25 ஆம் தேதி போய் இறங்கினேன். 26 ஆம் தேதி காலை சுந்தர் சாலை விபத்தில் இறந்து விட்டதாக தகவல் வெளியானது. அதுவரைக்கும் இருந்த யோகாம்பாள் வேற, இப்ப இருக்குற யோகாம்பாள் வேறு. நான் எப்பவும் சுந்தர் இல்லைன்னு நினைச்சது இல்ல” என தெரிவித்துள்ளார்.